பொது இடம் மக்களுக்கானது கட்சி கொடிக்கம்பங்களை வீடுகளில் வைக்கலாமே? ஐகோர்ட் கிளை கருத்து

4 months ago 13

மதுரை: பொது இடம் மக்களுக்கானது என்பதால், கட்சி கொடிக்கம்பங்களை வீடுகளில் வைத்துக் கொள்ளலாமே என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரை, விளாங்குடியைச் சேர்ந்த சித்தன், மாடக்குளம் கதிரவன் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அதிமுக கட்சி விழாவையொட்டி கூடல்புதூர் மற்றும் மதுரை பைபாஸ் ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் ஏற்கனவே உள்ள அதிமுக கொடிக் கம்பத்தை அகற்றி விட்டு, புதிய கொடிக்கம்பம் அமைக்க அனுமதி வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ‘‘பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடிக் கம்பங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது? தமிழ்நாட்டில் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில், இதுவரை எத்தனை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விபரத்தை டிஜிபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தார்‌. இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், ‘‘தமிழ்நாட்டில் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 114 வழக்குகள் பதிவாகியுள்ளன’’ என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘இதில் போலீசாரின் பங்கு என்ன? கட்சிக்கொடி வைப்பது தொடர்பாக ஏதேனும் விதிகள் உள்ளனவா’’ என்றார். இதற்கு அரசுத் தரப்பில், ‘‘தடையில்லா சான்று வழங்குவது மட்டுமே போலீசாரின் பங்கு. தற்காலிகமாக கட்சி கொடிக்கம்பம் வைக்க அனுமதி கோரும்போது சாலை எந்த வரம்பிற்குள் வருகிறதோ அந்த அதிகாரி தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் உள்ளன’’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ‘‘நிரந்தரமாக கட்சி கொடிக்கம்பங்களை வைக்க எந்த விதிகளும் இல்லாத நிலையில், எவ்வாறு கட்சி கொடிக்கம்பங்கள் வைக்கப்படுகின்றன? அந்த இடத்திற்கு சம்பந்தப்பட்ட கட்சியினர் வாடகை செலுத்தலாமே? பொது இடங்களில் ஏராளமான கட்சி கொடிக்கம்பங்கள் உள்ளன. இதனால் ஏராளமான பிரச்னைகள் எழுகின்றன.

பொதுவான இடத்தில் கட்சிக்கொடி கம்பத்தை வைக்க ஏன் அனுமதி கோருகிறீர்கள்? தங்களது வீடுகளில் வைத்துக் கொள்ளலாமே? பொது இடம் பொதுமக்களுக்கானது. அங்கு தான் கொடி கம்பங்களை வைக்க வேண்டும் என்றால் சொந்தமாக நிலம் வாங்கி வைத்துக் கொள்ளலாமே?’’ எனக் கூறி, மனுக்களின் மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி ஒத்தி வைத்தார்.

The post பொது இடம் மக்களுக்கானது கட்சி கொடிக்கம்பங்களை வீடுகளில் வைக்கலாமே? ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article