*படகில் சவாரி சென்று உற்சாகம்
ஏற்காடு : பொங்கல் பண்டிகை மற்றும் வாரவிடுமுறையையொட்டி, ஏற்காடு மற்றும் பூலாம்பட்டியில் திரண்ட சுற்றுலா பயணிகள், படகில் சவாரி சென்றும், பூங்காவில் விளையாடியும் மகிழ்ந்தனர். சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும். இந்நிலையில், விடுமுறை நாளான நேற்று, ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ேராஜா தோட்டம், சேர்வராயன் கோயில், கரடியூர், அண்ணா பூங்கா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று, இயற்கையை கண்டு ரசித்தனர்.
ஏற்காடு படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால், நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
நேற்று ஏற்காட்டில் காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. பனியால் இதமான சூழல் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பால், ஏற்காட்டில் உள்ள அனைத்து கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
அதே போல், இடைப்பாடி அருகே குட்டி கேரளா என்று அழைக்கப்படும் பூலாம்பட்டியில், நேற்று பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக வந்திருந்தனர். அவர்கள் விசைப்படகில் உற்சாக சவாரி செய்து, செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும் பூலாம்பட்டி பேரூர் சிறுவர் பூங்கா சந்தை திடலில், அதிகளவில் கூட்டம் காணப்பட்டது.
மீன் கடை, ஓட்டல்களில் கூட்டம் அதிக அளவில் இருந்தது. படித்துறை கைலாசநாதர், மாட்டுக்கார பெருமாள், மூலப்பாறை பெருமாள் கோயில்கள், நீர்மின் கதவணை மற்றும் சினிமா படபிடிப்பு நடந்த வயல் வெளியில் மக்கள் கூடினர். அதிகளவில் சுற்றுலா பயணிகள் திரண்டதால், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post பொங்கல், வார விடுமுறையையொட்டி ஏற்காடு, பூலாம்பட்டியில் திரண்ட சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.