சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் 1,87,330 பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு நேற்று பயணித்துள்ளனர் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை பலரும் தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாட விரும்புவர். இம்முறை செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்கள் பொங்கல் பண்டிகை விடுமுறையுடன் வரும் 17ம் தேதி வெள்ளிக்கிழமையும் சேர்த்து அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 14ம் தேதிமுதல் 19ம் தேதி வரை 6 நாட்கள் தொடர் அரசு விடுமுறையே கிடைக்கிறது.
மேலும் பொங்கலுக்கு முந்தைய நாளான வரும் 13ம் தேதி திங்கட்கிழமை என்பதால் பலரும் அன்றைய தினமும் விடுப்பு எடுத்து நாளை முதல் 19ம் தேதிவரை 9 நாட்கள் நீண்ட விடுப்பு எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து, நேற்று முதல் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் செல்ல தொடங்கினர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் நேற்று முதல் 13ம் தேதி வரை 4 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் இருந்து தினமும் வழக்கமாக இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்புப் பேருந்துகள் என 4 நாட்களுக்கு மொத்தம் 14,104 பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 7,800 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நேற்று நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 1,87,330 பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் நேற்று கூடுதலாக 1,314 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,406 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 2,64,871 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் 94450 14436 ஆகிய அலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 1800 425 6151 என்ற இலவச எண் மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களிலும் புகார் அளிக்கலாம்.
The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று 1,87,330 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்: போக்குவரத்து கழகம் தகவல் appeared first on Dinakaran.