திருப்பூர் , ஜன.14: தமிழகம் முழுவதும் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.தமிழகத்தில் அனைத்து தரப்பினராலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படக் கூடிய பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க திருப்பூரில் உள்ள கடைவீதி பகுதிகளில் பொதுமக்கள் திரண்டனர். நேற்று காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். பொங்கல் பண்டிகைக்கு தேவையான பானை, கரும்பு, பொங்கல் பானைக்கு கட்ட வேண்டிய மஞ்சள் கொத்து, காப்பு கட்டுவதற்கு தேவையான ஆவாரம்பூ மற்றும் பூலப்பூ,கரும்பு,வீடு மற்றும் கோவில்களில் பூஜை செய்வதற்கு தேவையான வாழை இலை,பழ வகைகள் உள்ளிட்டவற்றையும் வாங்கி சென்றனர். திருப்பூரில் இருந்து வெளியூர் செல்லக்கூடிய தொழிலாளர்களும் தங்கள் ஊர்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை திருப்பூரிலிருந்து வாங்கிச் சென்றனர்.வழக்கமாக செயல்படும் கடைகள் மட்டுமல்லாது திருப்பூரில் பல்லடம் சாலை தாராபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக சாலையோர கடைகளும் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்தனர்.
The post பொங்கல் பண்டிகைக்காக கரும்பு, மஞ்சள், பூக்கள் விற்பனை ஜோர் appeared first on Dinakaran.