பைனலில் இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது: நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் பேட்டி

3 hours ago 2

லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நேற்றிரவு நடந்த 2வது அரையிறுதியில் நியூசிலாந்து-தென்ஆப்ரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 362 ரன் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 108, கேன் வில்லியம்சன் 102, டேரில் மிட்செல், பிலிப்ஸ் தலா 49 ரன் விளாசினர். பின்னர் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணியில் கேப்டன் பவுமா 56, ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் 69, மார்க்ரம் 31 ரன் எடுக்க டேவிட் மில்லர் நாட் அவுட்டாக 67 பந்தில் 100 ரன் எடுத்தார். 50 ஓவரில் தென்ஆப்ரிக்கா 9 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்களே எடுத்தது. இதனால் 50 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிபெற்று பைனலுக்குள் நுழைந்தது. அந்த அணியின் பவுலிங்கில் கேப்டன் சான்ட்னர் 3, பிலிப்ஸ், மாட் ஹென்றி தலா 2 விக்கெட் எடுத்தனர். ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் கூறுகையில், “இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சி.

இந்த தொடர் முழுவதும் நாங்கள் நல்ல அணிகளால் கடும் சவால்களை எதிர்கொண்டோம். இந்தியாவுக்கு எதிராக ஏற்கனவே விளையாடி நல்ல அனுபவத்தை பெற்றிருக்கிறோம். மீண்டும் அவர்களை சந்திப்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ரச்சின் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். பவுலர்களும் முக்கிய கட்டத்தில் விக்கெட் எடுத்தனர். தனிப்பட்ட முறையில் நானும் சிறப்பாக பந்து வீசி விக்கெட் வீழ்த்தி இருக்கிறேன். அதுவும் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஒரே அணியாக இணைந்து எதிரணியின் மீது நெருக்கடி செலுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய திட்டம். வில்லியம்சன் அணியின் நட்சத்திர வீரர். அவர் தொடர்ந்து முக்கிய போட்டிகளில் ரன்கள் சேர்ப்பார். அணியில் 4 ஸ்பின்னர் இருப்பதால் நல்ல பலன் கிடைத்திருக்கிறது. 320 ரன் எடுத்திருந்தால் கூட இந்த ஆட்டத்தில் தோற்று இருப்போம். துபாயில் நாங்கள் ஏற்கனவே விளையாடியிருக்கிறோம். அந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் கடும் நெருக்கடியை கொடுத்தோம்.

இதன் மூலம் அவர்களை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இறுதி போட்டியில் நான் டாஸ் வெல்ல கூடாது என்று நினைக்கிறேன்’’ என்றார். ஆட்டநாயகன் ரச்சின் ரவீந்திரா கூறுகையில, \”அணியின் வெற்றிக்காக பங்காற்றுவது என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் அரையிறுதியில் சதம் அடித்தது சிறப்பானது. நிச்சயமாக இந்த வெற்றியை நாங்கள் கொண்டாடுவோம். ஆனால் துபாய்க்கு சென்றவுடன் இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து நாங்கள் யோசிக்க தொடங்கி விடுவோம், என்றார். தென்ஆப்ரிக்க கேப்டன் பவுமா கூறுகையில், “நியூசிலாந்து சிறப்பாக செயல்பட்டது. ஆரம்பத்திலேயே எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. நானும் ரஸ்ஸியும் நன்றாக பேட்டிங் செய்தோம். ஆனால் மிடில் ஆர்டரில் அடித்தளத்தை எங்களால் அமைக்க முடியவில்லை’’ என்றார். துபாயில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

The post பைனலில் இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது: நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article