போட்டித் தேர்வர்களுக்காக 3,044 புத்தகம் ஒதுக்கீடு; மாவட்ட மைய நூலகத்தில் ₹1.68 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப்பணிகள்

2 months ago 16

சேலம், செப்.30: சேலம் மாவட்ட மைய நூலகத்தில் ₹1.68 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகிறது. மேலும், போட்டித் தேர்வர்களுக்காக 3,044 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பள்ளி மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும், போட்டித்தேர்வர்களுக்கு உதவிடும் வகையிலும், நூலகங்கள் அனைத்தும் நவீனமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்கள் புரனமைக்கப்பட்டு, பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆயிரக்கணக்கான புதிய புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, ஒரு மாவட்ட மைய நூலகம், 49 கிளை நூலகங்கள், 78 ஊர்புற நூலகங்கள், 41 பகுதி நேர நூலகங்கள், 16 முழு நேர கிளை நூலகங்கள் மற்றும் ஒரு நடமாடும் நூலகம் என மொத்தம் 186 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றது. இதில், மாவட்ட மைய நூலகம், சேலம் வின்சென்டில் உள்ள அரசு கலைக்கல்லூரி அருகே செயல்பட்டு வருகிறது. இங்கு போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளுக்கென பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக, சேலம் மாவட்ட மைய நூலகத்தினை மேலும் நவீன மையமாக்கிட, ₹1.68 கோடி மதிப்பீட்டில் கட்டிட மராமத்து பணிகள், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கான பல்வேறு வசதிகள், நூலகம் மறுசீரமைப்பு பணிகள் உள்ளிட்ட நூலக மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: சேலம் மாவட்ட மைய நூலகத்தில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளுக்கான புத்தகங்கள், கலை, இலக்கியம், கட்டுரை, ஓவியம், அறிவியல், வரலாறு, பொது அறிவு உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு நூல்களும், கார்டூன் திரைப்படங்கள் குறித்த புத்தகங்கள், வண்ணம் தீட்டுதல், காகித சிற்பங்கள், என குழந்தைகளுக்கான புத்தகங்கள் என மொத்தம் 1.94 லட்சம் புத்தகங்கள் உள்ளன. இதில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளுக்கென மட்டும் 3,044 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

நாள்தோறும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இந்நூலகத்திற்கு வருகை புரிகின்றனர். அதேபோல் தினசரி 150க்கும் மேற்பட்ட வாசகர்களும் மாவட்ட மைய நூலகத்திற்கு வருகை தந்து பயனடைந்து வருகின்றனர். அவர்களுக்கான குடிநீர், கழிப்பிட வசதி, காற்றோட்ட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், போட்டி தேர்வுகளில் மாணவ, மாணவிகள் எளிதில் வெற்றிபெற செய்யும் வகையில், புதிய பதிப்புகளில் வெளிவரும் புத்தகங்களை அதிகளவில் இருப்பு வைத்திட நூலக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கழகம் சார்பில், மாவட்ட மைய நூலகத்தில் ₹1.68 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை, அடுத்த ஒரு மாத காலத்திற்குள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்தார். ஆய்வின் போது மாவட்ட நூலகர் விஜயகுமார், சேலம் தாசில்தார் தாமோதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post போட்டித் தேர்வர்களுக்காக 3,044 புத்தகம் ஒதுக்கீடு; மாவட்ட மைய நூலகத்தில் ₹1.68 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப்பணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article