பேருந்து வழித்தட சாலைகளில் 8,340 டிஜிட்டல் பெயர் பலகை: மாமன்ற கூட்டத்தில் முடிவு

3 weeks ago 5

சென்னை: மாநகராட்சி முழுவதும் உள்ள உட்புற சாலைகள் மற்றும் பேருந்து தட சாலைகளில் உள்ள 8,340 பழைய பெயர் பலகைகளை நீக்கி, புதிதாக டிஜிட்டல் பெயர் பலகைகளாக மாற்றி அமைக்கப்படும் என மாமன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்தாண்டிற்கான இறுதி மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது. இதில் 91 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் விவரம் வருமாறு:
* மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் பல்நோக்கு போக்குவரத்து பேருந்து வளாகத்தை 822 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமானம் மேற்கொள்ள ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மூலமாக பேருந்து நிலைய திட்ட பகுதிக்கு 200 கோடி ரூபாய், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் பங்களிப்பாக நடைபாதை மற்றும் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதிக்காக 115 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. மீதமுள்ள 506 கோடி ரூபாய் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் மூலம் காலம் சார்ந்த கடனாக தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள நிலையில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
* சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 1.75 லட்சம் இன்டர்நெட் கம்பங்கள் நட அனுமதிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் நடப்பட்ட இன்டர் நெட் கம்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஒழுங்கற்ற முறையில் நடப்பட்ட இன்டர்நெட் கம்பங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். அனுமதித்ததை விட அதிக கம்பங்கள் நடப்பட்டிருந்தால் கம்பங்களுக்கு தலா ரூ.75,000 அபராதம். வசூலிக்கப்படும்.
* மாநகராட்சி முழுவதும் உள்ள உட்புற சாலைகள் மற்றும் பேருந்து தட சாலைகளில் உள்ள 8,340 பழைய பெயர் பலகைகளை நீக்கி, புதிதாக டிஜிட்டல் பெயர் பலகைகளாக மாற்றி அமைக்கும் பணிக்கு நிர்வாக அனுமதி மற்றும் பணிகள் இரண்டு கட்டமாக நடைபெற ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. 15 மண்டலங்களை இரண்டு கட்டமாக பிரித்து, மண்டலம் 1 முதல் 8 வரை உள்ள மண்டலங்களை ஒரு கட்டமாகவும், மண்டலம் 9 முதல் 15 வரை மண்டலங்களை இரண்டாம் கட்டமாகவும், இந்த டிஜிட்டல் பெயர் பலகைகளாக மாற்ற ஒப்பந்தத்திற்கு மாமன்ற கூட்டத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
* சென்னை பள்ளிகளில் 2023ல், 10 மற்றும் 12ம் வகுப்பில் அரசு பொது தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சிக்கு உதவிய ஆசிரியர்களை 2024-25ம் கல்வியாண்டில் விடுமுறை நாட்களில் திருச்சி ஐஐஎம் மற்றும் என்ஐஇடி ஆகிய இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
* சென்னை கடற்கரைகளில் சவாரிக்கு பயன்படுத்தப்படும் குதிரைகளுக்கான தொழுவங்கள் சேப்பாக்கம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் பகுதிகளில் அமைக்க மன்ற கூட்டத்தில் அனுமதிக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* மாநகராட்சியில் தற்காலிக மழலையர் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்காலிக மழலையர் ஆசிரியர்கள் ரூ.11,970 பெறும் நிலையில் அது ரூ.14,150ஆக உயர்த்தப்படுகிறது.
* சென்னை மாநகராட்சியில் மொத்தம் 5,061 காலி பணியிடங்கள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியில் புதிய பள்ளிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. ஏற்கனவே செயல்பட்டு வரும் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.
* பெண்களுக்கான கணினிப் பயிற்சி மற்றும் தையல் பயிற்சிப் பள்ளி அனைத்து மண்டலங்களிலும் விரிவுபடுத்தப்படுகிறது.
* மாமன்ற கூட்டத்தில் மன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி தர் மற்றும் மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமாரின் கோரிக்கையை ஏற்று, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் மாணவர்கள் அதிலும், குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரம் உயர கட்டணமில்லா கணினி பயிற்சி மற்றும் தையல் பயிற்சிப் பள்ளி ஆகிய திட்டங்களைத் தன்னுடைய சொந்த முயற்சியால் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில் இதுபோன்ற பயிற்சிப் பள்ளிகள் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியிலும், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, நம் முதலமைச்சர் கல்வி மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதின் அடிப்படையில் இந்த உன்னதமானத் திட்டம் அனைத்து மண்டலங்களிலும் விரிவுபடுத்தப்படும். * சென்னையில் கூடுதலாக 5 நாய் இன கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பது உள்ளிட்ட 91 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post பேருந்து வழித்தட சாலைகளில் 8,340 டிஜிட்டல் பெயர் பலகை: மாமன்ற கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article