பேருந்து நிலைய பணிகளை தொடங்கிய மாநகராட்சி அதிகாரிகளுக்கு துறைமுக அதிகாரிகள் எதிர்ப்பு: ராயபுரத்தில் பரபரப்பு

6 hours ago 2

சென்னை: பேருந்து நிலையம் அமைக்க பணிகள் தொடங்கிய மாநகராட்சி அதிகாரிகளை வெளியேற்றிய துறைமுக அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையின் மிகப் பழமையான பேருந்து நிலையமான பிராட்வே பேருந்து நிலையம் பழமையான கட்டமைப்புகளுடன் உள்ளதால், அதை இடித்துவிட்டு நவீனமயத்துடன் கட்டமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.823 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பிராட்வே பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில் ‘‘மல்டி மாடல் இன்டகிரேஷன்’’ என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கப்பட இருக்கிறது.

பிராட்வே பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில், 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் என அனைத்தையும் இணைக்கும் வகையில் 7 நடைமேம்பாலங்களும் அமைக்கப்பட உள்ளன. கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் போது, பயணிகள் வசதிக்காக பிராட்வே பேருந்து நிலையத்தை தீவுத்திடலுக்கு மாற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. இதற்காக ரூ.5 கோடியும் ஒதுக்கப்பட்டது. எனினும், தற்போது வரை இந்த தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில்தான், தீவுத்திடலுக்கு பதிலாக பிராட்வே பேருந்து நிலையத்தை ராயபுரம் என்ஆர்டி மேம்பாலம் அருகே தற்காலிமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டரும் விடப்பட்டுள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் 45 குடும்பங்களை இடமாற்றம் செய்யவும் இடம் கண்டறியப்பட்டுள்ளது. 1,400 ச.மீ. பரப்பளவில் 57 பேருந்துகளை நிறுத்தும் வசதியுடன் பேருந்து நிலையம் அமைய உள்ளது. தற்போது, அந்த இடத்தில் வேலைகளை தொடங்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள், துறைமுக அதிகாரிகளிடம் அனுமதி வாங்கவில்லை என கூறப்படுகிறது.

ஆனால் மாநகராட்சி அதிகாரிகளோ, சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து மறுநாள் அந்த இடத்திற்கு, ஜேசிபி, டிராக்டர் வாகனங்களை கொண்டு சென்று முதற்கட்ட வேலைகளை தொடங்கினர். அப்போது, அங்கு வந்த துறைமுக அதிகாரிகள், எந்த உத்தரவும் இல்லாமல் வேலைகளை தொடங்க கூடாது என மாநகராட்சி அதிகாரிகளை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தி வெளியேற்றியுள்ளனர். மாநகராட்சி அதிகாரிகளோ, இந்த மாதம் உத்தரவு வந்து விடும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதால் வேலையை தொடங்கினோம் என தெரிவித்துள்ளனர். ஆனாலும், துறைமுக அதிகாரிகளோ கொஞ்சமும் செவிசாய்க்காமல் மாநகராட்சி அதிகாரிகளை வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post பேருந்து நிலைய பணிகளை தொடங்கிய மாநகராட்சி அதிகாரிகளுக்கு துறைமுக அதிகாரிகள் எதிர்ப்பு: ராயபுரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article