பேரம்பாக்கத்தில் பரபரப்பு நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்: வருவாய் துறை அதிகாரிகள் அதிரடி

3 days ago 2

திருவள்ளூர்: பேரம்பாக்கத்தில் நீர் நிலைகளை ஆக்கிர மித்துக் கட்டப்பட்ட கட்டிடங் களை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக இடித்து அகற்றினர். தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர் நிலைகளை பாதுகாக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் சாலையின் அருகே செல்லக்கூடிய நீர்நிலை இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பேரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிடட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் ஆகியோர் ஆலோசனையின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் ஏ.கற்பகம் மேற்பார்வையில் வருவாய்த்துறை அதிகாரிகள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தங்களாகவே அகற்றிக் கொள்ளுமாறு முறையாக நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் கடைக்காரர்கள் யாரும் நீர்நிலையில் கட்டப்பட்ட கடைகளை அகற்ற முன்வரவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்று திருவள்ளூர் வட்டாசியர் செ.வாசுதேவன், போலிஸ் டிஎஸ்பி தமிழரசி ஆகியோர் தலமையில், துணை வட்டாட்சியர் வி.நரசிம்மன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அ.மணிசேகர், செல்வகுமார் வருவாய் ஆய்வாளர் கோபி ஷாலினி, கிராம நிர்வாக அலுவலர்கள் மதன், குருமூர்த்தி ஆகியோர் 100க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் வணிக வளாகம், பிரியாணி கடை, பூக்கடை, டீ கடை, ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க கட்டிடம் உள்ளிட்ட 35 கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடைக்காரர்கள் தங்களது கட்டிடத்தை இடிக்க வந்த வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கடைகளை அப்புறப்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் கால அவகாசம் கொடுக்க முடியாது என தெரிவித்த வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜோசிபி இயந்திரம் மூலம் இடித்து தரமட்டமாக்கினர். பேரம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கடம்பத்தூர் செல்லும் சாலையில் நீர்நிலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்களை நேற்று வருவாய் துறை அதிகாரிகள் அதிரடியாக இடித்து அகற்றிய சம்பவம் பேரம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பேரம்பாக்கத்தில் பரபரப்பு நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றம்: வருவாய் துறை அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article