
மீஞ்சூர்,
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டுபுதுநகரில் பாரத் பெட்ரோலியம் முனையம் செயல்பட்டு வருகிறது. இது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த முனையத்திற்கு எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் பெட்ரோல் பொருட்கள் சேமிப்பு கிடங்கில் சேமிக்கப்படுகிறது.
பின்னர் பெட்ரோலிய பொருட்கள் தரம் பிரித்து டேங்கர் லாரிகள் மூலம் திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் பெட்ரோல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த பெட்ரோலிய பொருட்கள் லாரிகளில் கொண்டு செல்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் லாரிகள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஒப்பந்த வாடகையை விட 15 சதவீதம் குறைவாக வழங்க பாரத் பெட்ரோலிய நிறுவனம் முடிவு செய்ததற்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 23-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலை நிறுத்த போராட்டம் நடந்து வரும் நிலையில் பாரத் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளுடன் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததை தொடர்ந்து நேற்று 5-வது நாளாக டேங்கர் லாரி டிரைவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.