பெற்றோருடன் பைக்கில் சென்றபோது மாஞ்சா நூல் கழுத்தறுத்து குழந்தை படுகாயம்: வியாசர்பாடியில் பரபரப்பு

2 hours ago 2

பெரம்பூர்: கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 8வது பிளாக் பகுதியை சேர்ந்த மெக்கானிக் பாலமுருகன் (33), நேற்று மாலை தனது மனைவி கவுசல்யா மற்றும் இரண்டரை வயது மகன் புகழ்வேலனுடன் பைக்கில், பேசின் பாலம் அசோக் பில்லர் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென பறந்து வந்த மாஞ்சா நூல், குழந்தை புகழ்வேலன் கழுத்தில் சிக்கியது. சுதாரித்துக் கொண்ட பாலமுருகன், பைக்கை நிறுத்துவதற்குள் குழந்தை கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து ரத்தம் வழிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பாலமுருகன் உடனடியாக குழந்தையை மீட்டு, வியாசர்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு, குழந்தை கழுத்தில் 7 தையல்கள் போடப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தகவலறிந்த வியாசர்பாடி காவல் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் வியாசர்பாடி முழுவதும் சோதனை செய்து அப்பகுதியில் காற்றாடி விட்ட விஜயகுமார், ஹரி, கரண், மற்றும் 16 வயது சிறுவர்கள் 2 பேர் என 5 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிடம் இருந்து மாஞ்சா நூல் காற்றாடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராயபுரத்தை சேர்ந்த ஜிலானி பாஷா (48), திருமணமாகி, 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கொருக்குப்பேட்டையில் உள்ள இறைச்சி கடையில் வேலை செய்யும் இவர், நேற்று மாலை வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, ராமலிங்க அடிகளார் கோயில் அருகே சென்றபோது, இவரது கழுத்தில் மாஞ்சா நூல் விழுந்தது. உடனடியாக பைக்கை நிறுத்தியுள்ளார். அதற்குள் கழுத்து மற்றும் கை உள்ளிட்ட இடங்களில் மாஞ்சா நூல் அறுத்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜிலானி பாஷா சிகிச்சை பெற்று வருகிறார்.

 

The post பெற்றோருடன் பைக்கில் சென்றபோது மாஞ்சா நூல் கழுத்தறுத்து குழந்தை படுகாயம்: வியாசர்பாடியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article