பெர்த்,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடி வரும் இந்தியா தடுமாறி வருகிறது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். மேலும், அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை. வாஷிங்டன் சுந்தர் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் பங்கேற்கவில்லை. இந்நிலையில், சுப்மன் கில் இந்த ஆட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
பார்டர்-கவாஸ்கர் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தின் போது இடது கை கட்டை விரலில் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டதால் பெர்த் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை என பி.சி.சி.ஐ தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.