பெர்த் டெஸ்ட்; இந்தியாவை 4 நாட்களில் ஆஸ்திரேலியா வீழ்த்தும் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

2 hours ago 2

பெர்த்,

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.

தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்நிலையில் பெர்த் நகரில் நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 4 நாட்களில் ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரண்டன் ஜூலியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, பெர்த்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 4 நாட்களில் ஆஸ்திரேலியா வீழ்த்தும். டாப் ஆர்டரில் இந்திய அணியில் கவலையை கொடுக்கும் விஷயங்கள் இருக்கிறது. ரோகித் சர்மா முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்பதை அவரே தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக பும்ரா கேப்டனாக இருப்பார். முதன்மை பவுலரான அவருக்கு கேப்டனாக செயல்படுவதால் நிறைய அழுத்தம் ஏற்படும். அவர் அற்புதமான பவுலர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், திடீரென உங்களுடைய முதன்மை பவுலர் கேப்டனாக செயல்படுவது வித்தியாசமான போட்டியாக இருக்கும். விராட் கோலி நியூசிலாந்துக்கு எதிராக சொந்த ஊரிலேயே நம்ப முடியாத வகையில் அவுட்டானார். எனவே அவர் தன்னுடைய சிறந்த பார்மில் இல்லை. அவர் கேப்டன் மற்றும் பயிற்சியாளருடன் நெருங்கி செயல்படுவதாக தெரியவில்லை. ஆனால் பெர்த்தில் அவர்கள் வெற்றிக்காக விளையாட முயற்சித்தால் அங்கேயே அனைத்தும் முடியலாம் என்று நினைக்கிறேன்.

நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவில் விராட் கோலி ஸ்பின்னர்களிடம் அவுட்டானார். இங்கே அவருக்கு நாதன் லயன் எதிரியாக இருப்பார். அதே சமயம் இங்கே விராட் கோலி மகிழ்ச்சியுடன் விளையாடுவதற்கான சூழ்நிலைகளும் இருக்கிறது. பெர்த் மைதானத்தில் வேகம், பவுன்ஸ் இருக்கும். அங்கே அவர் ஏற்கனவே கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட் ஆகியோருக்கு எதிராக விளையாடியுள்ளார்.

எனவே அவர்களுக்கு எதிராக நல்ல துவக்கத்தை பெற்றால் இந்தத் தொடர் விராட் கோலிக்கு நன்றாக அமையக்கூடும் என்று கருதுகிறேன். ஆனால் ஆஸ்திரேலியா அவரை வேகமாக அவுட்டாக்க வேண்டும். அவரை ஆஸ்திரேலிய அணி எளிதில் ரன்கள் அடிக்க விடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article