பெர்த்,
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது.இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.
தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.இதனால் இந்த தொடர் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது. பொதுவாக வெளிநாட்டு மண்ணில் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் இந்திய ஆடும் லெவனில் அஸ்வினை காட்டிலும், ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் ரவிசந்திரன் அஸ்வின் இந்தியாவின் ஆடும் லெவனில் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. 3 வேகப்பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் இந்தியாவின் பவுலிங் லைன் அப் அமைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.