கும்மிடிப்பூண்டி: பெருவாயில் – ஏலியம்பேடு சாலையில் பெயர்ந்து காணப்படும் சென்டர் மீடியனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெருவாயில் – ஏலியம்பேடு பொன்னேரி செல்லும் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இருவழிச் சாலை உள்ளது. இந்த சாலையானது சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையாக உள்ளது. இதில் சென்னை, கும்மிடிப்பூண்டி, பழவேற்காடு, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, எல்லாபுரம், பூண்டி, சத்தியவேடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.
குறிப்பாக பெருவாயில் – ஏலியம்பேடு செல்லும் சாலையைச் சுற்றி இரண்டு தனியார் கல்லூரிகளும், அரசு கலைக் கல்லூரிகளும் உள்ள நிலையில் மாணவர்கள் அரசுப் பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
இந்தநிலையில் ஏலியம்பேடு- பெருவாயில் இருவழிச் சாலை நடுவே அதிமுக ஆட்சியில் சென்டர் மீடியன் போடப்பட்டது. ஒரு வருடங்களுக்கு முன்பு லாரி ஒன்று இந்த சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. அப்போது மகேந்திரா சிட்டி நுழைவு வாயில் அருகே 20 மீட்டர் நீளமுள்ள சென்டர் மீடியன் சாலையோரமாக பெவர்ந்த நிலையில் இருந்து வருகிறது. அங்கு போதிய மின் விளக்குகள் இல்லாததால் லாரி, இருசக்கர வாகன ஓட்டிகள் தட்டுத் தடுமாறிதான் அதனை கடந்து செல்கின்றனர்.
புதிதாக வருபவர்களுக்கு இந்த சென்டர் மீடியன் சாய்ந்திருப்பது தெரியாமல் போய்விடும். எனவே இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும், விபத்து தடுப்பு விழிப்புணர்வு மின்விளக்கு அமைக்கவும் திருவள்ளூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிற்றரசுக்கு பலமுறை புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கலெக்டர் நேரில் சென்று பார்த்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதியைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post பெருவாயில் – ஏலியம்பேடு சாலையில் உடைந்து கிடக்கும் சென்டர் மீடியனால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.