பெருக்கரணை ஊராட்சியில் புதிய துணை சுகாதார நிலையம் கட்ட வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

3 hours ago 2

செய்யூர்: பெருக்கரணை ஊராட்சியில், புதிய துணை சுகாதார நிலையம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்துள்ளது பெருக்கரணை ஊராட்சி. இந்த ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியின் மையப்பகுதியில் துணை சுகாதார நிலையம் இயங்கி வந்தது. இந்நிலையத்தில் பணியாற்றி வந்த செவிலியர்கள், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து வந்தனர்.

இதனால், பெருக்கரணை மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த சுகாதார நிலைய கட்டிடம் நாளடைவில் பழுதாகி போனதால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சுகாதார நிலைய கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. அதன்பின், இங்கு புதிய கட்டிடம் கட்டித் தரப்படவில்லை.

இதனால், இங்கு பணியாற்றிய செவிலியர் கிராமம் கிராமமாக சென்று நோயாளிகள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சை அளித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவசர காலங்களில் இந்த கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட தூரம் உள்ள மருத்துவமனைகளை நாடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில், புதிய துணை சுகாதார நிலையம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் நீண்ட காலமாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மாவட்ட சுகாதார துறையினர் இங்கு வசிக்கும் பொதுமக்கள் நலனை கருதி இப்பகுதியில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பெருக்கரணை ஊராட்சியில் புதிய துணை சுகாதார நிலையம் கட்ட வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article