பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்: 5 மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

2 hours ago 1

சாயல்குடி, ஜன.23: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ராமநாதபுரம்,சிவகங்கை,மதுரை,தேனி,திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் சத்திய மூர்த்தி தலைமை வகித்தார். அமைப்பாளர்கள் செந்தூர் பாண்டியன், ரஞ்சித்குமார், ஆப்பநாடு இளைஞர்கள் விவசாயிகள் சங்க நிறுவனர் மனோஜ்குமார் முன்னிலை வகித்தனர். அரசு விதை பண்ணை முன்னோடி நாகரத்தினம் வரவேற்றார். ஐந்து மாவட்ட பெரியாறு,வைகை பாசன விவசாய சங்க தலைவர் எஸ்.ஆர்.தேவர் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.

மாநாட்டில் பெரியாறு அணை நீர்மட்டத்தை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 152 அடியாக உயர்த்த வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 85ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பு ஒரு போக சாகுபடிக்கு நீர் வழங்க வேண்டும். கமுதி குண்டாறு கதவணை மற்றும் ரெகுநாதகாவிரி, மலட்டாறு, நாராயணதேவன் கால்வாய், கஞ்சம்பட்டி ஓடை, இருவேலி ஓடை, சக்கிலி கால்வாய், கூத்தன்கால்வாய் உள்ளிட்ட கமுதி, முதுகுளத்தூர், கடலாடி,சாயல்குடி, சிக்கல் பகுதியிலுள்ள வரத்து கால்வாய்கள், ஓடைகள், கண்மாய்களை மராமத்து செய்ய வேண்டும். பழுதான ஷட்டர்களை புதுப்பிக்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வழங்கப்படும் வைகை பங்கீடு தண்ணீரை ஆயக்கட்டுதாரர் இல்லை எனக் கூறி முதுகுளத்தூர், கடலாடி பகுதிகள் ஆண்டுதோறும் புறக்கணிக்கப்படுகிறது. எனவே பழைய முறையில் தண்ணீர் வழங்க வேண்டும். மான், காட்டுப்பன்றியால் பாதிக்கப்படும் விவசாய பயிர்களுக்காக நிவாரணத் தொகை வழங்க வேண்டும். நெல் போன்ற சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாய வேலை காலம் மற்றும் காட்டு விலங்குகள் தாக்கி இறந்தால் விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மூத்த விவசாயிகளுக்கு ஓய்வூதிய உதவித்தொகை வழங்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2023-2024ல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு தொகை, நிவாரணம் வழங்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயரான நிலையில் இருந்த 2.50 லட்சம் ஏக்கர் நெல் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு நிவாரணம், பயிர்காப்பீடு திட்டத்தில் இழப்பீடும் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டது. பொருளாளர் லோகநாதன் நன்றி கூறினார்.

The post பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்: 5 மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article