சென்னை: தந்தை பெரியாரை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய, தமிழ்த் தேசிய அமைப்புகள் இன்று முற்றுகையிடுவதாக அறிவித்துள்ளன. சென்னை நீலாங்கரையில் முற்றுகையிடும் அமைப்பினருக்கு எதிர்ப்பு தெரிவிக்க சீமான் வீடு முன்பாக ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் இரவு முதலே குவிந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது. தந்தை பெரியார் குறித்து அண்மைக்காலமாக சீமான் தொடர்ந்து அவதூறாகவும் ஆதாரம் இல்லாமலும் பேசி வருகிறார் என்பது பெரியார் உணர்வாளர்களின் குற்றச்சாட்டு.
தந்தை பெரியார் தாய் மொழியை சனியன் என்று கூறினார்; வள்ளலாரை விட பெரியார் என்ன புரட்சி செய்துவிட்டார்; தாய்- மகளுடன் உறவு வைத்துக் கொள்ள சொன்னவர்தான் பெரியார்- அவரா பெண்ணுரிமைக்கு போராடியவர்; அம்பேத்கரும் பெரியாரும் எந்த புள்ளியில் ஒன்றாக இணைகிறார்கள்? என அடுத்தடுத்து சீமான் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சீமானின் இந்தப் பேச்சுக்கு பெரியார் அமைப்பினர் ஆதராங்கள் கேட்ட போது, பெரியார் புத்தகங்களை நாட்டுடையாக்கிமானால் அதில் கிடைக்கும் என மழுப்பலாக பதில் கூறினார். மேலும் சீமானுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் சீமான் பேசி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தமிழ்நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் சீமான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தந்தை பெரியாரை இழிவுபடுத்துகிற சீமான் வீடு இன்று முற்றுகையிடப்படும் என தந்தை பெரியார் திக, மே 17 இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது. இது தொடர்பான சுவரொட்டிகள் சென்னை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு முன்பாகவும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்த நிலையில் சீமான் வீட்டுக்கு பாதுகாப்பு தரும் வகையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் நேற்று இரவு முதலே அவரது வீடு முன்பாக குவிந்து வருகின்றனர். இதனால் சீமான் வீடு அமைந்துள்ள சென்னை நீலாங்கரை பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. மேலும் சீமான் வீடு முற்றுகைப் போராட்டம், நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு ஆகியவற்றால் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு முன்பாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
The post பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் வீட்டை முற்றுகையிடத் தயாராகி வரும் 30க்கும் மேற்பட்ட அமைப்பினர்.! 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.