பெரியபாளையம் அருகே செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்

1 week ago 3


பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே கல்பட்டு கிராமத்தில் இன்று காலை செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே கல்பட்டு கிராமத்தில், ஆரணி ஆற்றங்கரையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த செல்லியம்மன் ஆலயம் அமைந்திருந்தது. பின்னர், அதன் அருகிலேயே மற்றொரு இடத்தில் கிராம மக்களின் பங்களிப்புடன் செல்லியம்மனுக்கு புதிதாக ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, செல்லியம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு, கடந்த 2 நாட்களாக அனுக்ஞை பூஜை, கணபதி பூஜை, கணபதி ஹோமம், சங்கீதா ஆலிங்கனம், பூரணாஹிதி, கோ பூஜை, யாகசாலை அமைத்து ஹோம பூஜைகளுடன் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை வைத்து வாஸ்திரதானம், சக்தி ஹோமம், ராஜராஜேஸ்வரி அஷ்டோத்திர ஹோமம் நடைபெற்றது. இந்நிலையில், இன்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களை அர்ச்சகர் ராஜசேகர் தலைமையில் திருக்கோவில் அர்ச்சகர் கோவிந்தராஜ் குருக்கள் குழுவினர் கலசங்களை சுமந்து, மேள தாளங்கள் முழங்க வேத மந்திரங்கள் ஓதியபடி கோவில் சுற்றி வலம் வந்தனர்.

பின்னர் ஆலய கோபுரத்தின் மீதுள்ள கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். மேலும், அங்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மூலவர் செல்லியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், ஜவ்வாது உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட செல்லியம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. அனைத்து பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்களும் விழா குழுவினரும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

The post பெரியபாளையம் அருகே செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Read Entire Article