பெரிய ஒபுளாபுரம் கிராமத்தில் நெற்பயிர் செய்த அரசு நிலத்தை மீட்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு: அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்

2 weeks ago 3

கும்மிடிப்பூண்டி, நவ. 6: கும்மிடிப்பூண்டி அருகே பெரிய ஒபுளாபுரத்தில் நெற்பயிர் செய்த அரசு நிலங்களை மீட்க சென்ற அதிகாரிகளுடன் விவசாயிகள் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அதிகாரிகள் திரும்பிச்சென்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஒபுளாபுரம் ஊராட்சியில் நாகராஜ் கண்டிகை, சின்ன ஒபுளாபுரம், காய்லர்மேடு, துராப்பள்ளம், எளாவூர் பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பல ஏக்கரில் நெல், வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை காலத்திற்கு ஏற்றார் போல் விவசாயம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக, பெரிய ஒபுளாபுரம் ஊராட்சியில் பொதுப்பணித்துறை, வருவாய் துறைக்கு சொந்தமாக அரசு நிலங்கள் சுமார் 60 ஏக்கருக்கு மேல் உள்ளது. இதில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள் உள்ளன. விவசாயமும் பயிர் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்ல, வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சொந்தமான குலம் புறம்போக்கு, கால்வாய் புறம்போக்கு என பல்வேறு வகைபாடுகள் உள்ளன. பெரிய ஒபுளாபுரம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி பின்புறம் நீர் பாசன ஏரி உள்ளது. இந்த ஏரியை ஒட்டியுள்ள விளைநிலங்களில் சில விவசாயிகள் நெற்பயிர் செய்து வருகின்றனர். இதை அகற்றக்கோரி அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவர் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடத்தில் ஒருவர் விவசாயம் செய்து வரும் நிலத்தை மட்டும் அகற்றக்கோரி பொதுப்பணித்துறைக்கு புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி, போலீசார் உதவியுடன் நேற்று உதவி பொறியாளர் கண்ணன் தலைமையில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் பொக்லைன் இயந்திரங்களுடன் விவசாயம் செய்து வந்துள்ள நிலங்களை மீட்க வந்தனர். இதை அறிந்த ஊர் பெருந்தகைக்காரர் மற்றும் விவசாயிகள், இளைஞர்கள், கவுன்சிலர் வரை ஒன்றிணைந்து, அதிகாரிகளிடம் ‘‘நாங்கள் தற்போது நெற்பயிர் வைத்துள்ளோம். எங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்’’ என்றனர். ஆனால், அதிகாரிகள் மறுத்து வந்த நிலையில் விவசாயிகள் இதே ஊராட்சியில் பல வகை வகைப்பாடு கொண்ட அரசு நிலங்கள் உள்ளது. அதில் தொழிற்சாலைகள், நெற்பயிர் கட்டப்பட்டுள்ளது. அவை அனைத்தும் எடுங்கள், நாங்களும் எடுத்து விடுகிறோம் என சலசலப்புடன் கூறினர்.

இதற்கு அதிகாரிகள், நீங்கள் முறையாக வட்டாட்சியர், பொதுப்பணித்துறை, மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் மனு கொடுங்கள் என கூறிய பின்னர் கூட்டம் கலைந்து சென்றது. இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பெரிய ஒபுளாபுரம் கிராமத்தில் நெற்பயிர் செய்த அரசு நிலத்தை மீட்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு: அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Read Entire Article