பெரம்பூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் எடுத்து தருவதாக பயணிகளிடம் தொடர் கைவரிசை: போலீசார் விசாரணை

1 month ago 5

பெரம்பூர்: பெரம்பூர் ரயில் நிலையத்தில், முன்பதிவு டிக்கெட் எடுத்து தருவதாக, வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து நூதன திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அடுத்தபடியாக பெரம்பூர் ரயில் நிலையத்தில் வடமாநில ரயில்கள் அதிகளவில் நின்று செல்வது வழக்கம். இதனால், இந்த ரயில் நிலையத்தில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், சமீப காலமாக இந்த ரயில் நிலையத்திற்கு வரும் வடமாநில நபர்களை குறிவைத்து சிலர் நூதன முறையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான வடமாநில நபர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யாமல் அன்ரிசவ் எனப்படும் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணம் செய்வது வழக்கம். அவ்வாறு வரும் வடமாநில நபர்களை குறிவைத்து உங்களுக்கு உடனடியாக டிக்கெட் முன்பதிவு செய்து தருவதாக கூறி, அவர்கள் உடமைகளை மற்றும் பணத்தை அபகரிக்கும் செயல் தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 9ம் தேதி காலை 10 மணிக்கு பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக காத்திருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த நரநந்தன் திவாரி (25) என்பவருக்கு, டிக்கெட் எடுத்து தருவதாக கூறி, அவரிடமிருந்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் 4 ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

நேபால் மாநிலத்தை சேர்ந்த சர்வான் சடா (28) என்பவர், வேளச்சேரியில் உள்ள செருப்பு மற்றும் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர், சொந்த ஊர் செல்வதற்காக நேற்று காலை 10 மணிக்கு பெரம்பூர் ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த 2 பேர், உங்களுக்கு முன்பதிவு டிக்கெட் எடுத்து தருவதாக கூறி, அவரை அழைத்து சென்று ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரத்தை அபேஸ் செய்து சென்றனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த சர்வான் சடா இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து 2 சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே நபர்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பெரம்பூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் எடுத்து தருவதாக பயணிகளிடம் தொடர் கைவரிசை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article