பெரம்பலூர்,மே.11: வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.1.52 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்குதமிழ்நாடு அரசுப் போக்கு வரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் அடிக்கல்நாட்டினார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்னம், மூங்கில்பாடி, கொளப்பாடி, புதுவேட்டக்குடி, காடுர், ஓலைப்பாடி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று 10ம் தேதி மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் ரூ1.52 கோடி மதிப்பிலான 10 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்துப் பேசியதாவது :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மக்களின் தேவைகளை உணர்ந்து, அவற்றை திட்டங்களாக வழங்கி வருகிறார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் அரசின் திட்டங்கள் அனைத்து பகுதி களிலும் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் நேற்று வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டங்களின் கீழ், குன்னம் ஊராட்சியில் ரூ.16,45,000 மதிப்பீட்டில் புதிய அங்கன் வாடி மைய கட்டிடம் கட்டும் பணி, கொளப்பாடி ஊராட்சியில் ரூ.29,70,000 மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் கட்டும் பணி, ஓலைப்பாடி ஊராட்சி வேப்பூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.8,34,000 மதிப்பீட்டின் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதுவேட்டக்குடி ஊராட்சியில் ரூ.31,40,000 மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டும்பணி, ரூ.8,10,000 மதிப்பீட்டில் வரகூர் மெயின் ரோட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணி, காடூர் ஊராட்சி நல்லறிக்கையில் ரூ.16,45,000 மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டும்பணி, மாநில நிதிக்குழு மானிய நிதியின் கீழ் ரூ.10,34,000 மதிப்பீட்டில் புது வேட்டக்குடி வளைஞ்சான் ஏரி தூர்வாரும் பணி, காடுர் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லறிக்கையில் ரூ.6,58,000 மதிப்பீட்டில் நாச்சியார் ஏரி தூர்வாரும் பணி, ரூ.14,65,000 மதிப்பீட்டில் புது ஏரி தூர் வாரும் பணி, மத நல்லிணக்க நிதியின் கீழ் மூங்கில்பாடி ஊராட்சி ஆதிதிராவிடர் பகுதியில் ரூ.10,00,000 மதிப்பீட்டில் மயான சாலை பலப்படுத்தும் பணி, என மொத்தம் ரூ.1,52,01,000 மதிப்பீட்டில் 10 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப் பட்டு, பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த காலத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் அட்மா தலைவர்கள் ஜெகதீசன், ராஜேந்திரன் முன்னாள் மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் உறுப்பினர் டாக்ஞர் கருணா நிதி, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், சேகர், குன்னம் தாசில்தார் சின்னதுரை மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.1.52 கோடி மதிப்பீல் புதிய திட்டப்பணிகள்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.