பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மருத்துவமனை எதிரில் அம்பேத்கரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு பென்னாகரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ராஜலிங்கம் மகன் நவீன்குமார் (25) என்பவர் மதுபோதையில் அங்கு வந்து, தான் வைத்திருந்த வாட்டர் பாட்டிலில் இருந்த பெட்ரோலை சிலை மீது ஊற்றி தீ வைத்துள்ளார். அதனைக்கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தீ வைத்ததில் சிலையில் பெயிண்ட் அழிந்ததுடன், பல இடங்களில் விரிசல் விட்டது.
இதுகுறித்து கள்ளிபுரம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் நாகராஜ், பென்னாகரம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து சிலையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து வீட்டில் மதுபோதையில் இருந்த நவீன்குமாரை மடக்கி பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அப்போது அவர், போதையில்தான் சிலைக்கு தீ வைத்தேன் என்றார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி சிறையிலடைத்தனர்.
The post பென்னாகரத்தில் பரபரப்பு: அம்பேத்கர் சிலைக்கு தீ வைத்த வாலிபர் கைது appeared first on Dinakaran.