
லண்டன்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இந்திய நேரப்படி நாளை (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த நிலையில் , இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக் ஆதர்டன் அளித்த ஒரு பேட்டியில், 'இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக செயல்பட்ட இந்த 3 ஆண்டுகளில், தற்போது லார்ட்சில் நடக்க உள்ள டெஸ்ட் போட்டி கடும் சவாலாக இருக்கப்போகிறது. இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டுக்கு முன்பாக தங்கள் அணி வீரர்களின் உத்வேகத்தை எப்படி உயர்த்துவது என்பது குறித்து அவர் சிந்திக்க வேண்டும். இது அவரது கேப்டன்ஷிப்புக்கும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மீண்டு வருவதற்கும் மிகப்பெரிய சோதனையாக இருக்கும்.
முதலாவது டெஸ்டுக்கும், 2-வது டெஸ்டுக்கும் 7 நாட்கள் இடைவெளி இருந்தன. ஆனாலும் அவரது பணிச்சுமை வேறுபடவில்லை. 2-வது டெஸ்டில் 9 ஓவர்கள் குறைவாகவே வீசினார். பேட்டிங் செய்யும் நேரமும் 16 நிமிடங்கள் குறைந்தது. 7 நாட்கள் ஓய்வு கிடைத்தும் சோர்வாக இருக்கும் அவர் 3 நாளில் தொடங்கும் அடுத்த போட்டிக்கு எப்படி தன்னை தயார்படுத்தப்போகிறார் என்ற கேள்வி எழுகிறது' என்றார்