பெண்ணையாற்றில் மீண்டும் வெள்ள பெருக்கு கரைப்பகுதிகள் உடையும் அபாயம்

4 weeks ago 6

*உடனடியாக மண்ணரிப்பை சீரமைக்க வலியுறுத்தல்

ரெட்டிச்சாவடி : வெள்ள பெருக்கு காரணமாக மீண்டும் கரையோர பகுதிகளில் வெள்ளம் புகும் அபாயம் உள்ளதால், உடனடியாக இப்பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து மண்ணரிப்பை தடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வங்கக்கடலில் உருவாகிய பெஞ்சல் புயலால் கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் வரலாறு காணாத அளவிற்கு கன மழை கொட்டி தீர்த்தது.

இதேபோல் நீர் பிடிப்பு பகுதிகளான கர்நாடகா மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால் சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் வரலாறு காணாத அளவிற்கு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பெஞ்சல் புயல், வெள்ள பாதிப்பில் இருந்து தற்போது தான் மக்கள் ஓரளவு மீண்டு வருகின்றனர். வெள்ளம் சுவடு மறையாத நிலையில் வங்கக்கடலில் மீண்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதியில் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டு தீர்த்து வருகிறது.

இந்த நிலையில் சாத்தனூர் அணையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் 13 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தென்பெண்ணை ஆற்றல் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக குமந்தான்மேடு முதல் கடல் பகுதி வரை ஆற்றங்கரையோர பகுதிகளில் மண் அரிப்பை தடுக்க கடந்த ஆண்டு கரைகளை பலப்படுத்தினர். தற்போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பல்வேறு இடங்களில் கரைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளநீர் புகுந்தது பொது மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது.

இந்த நிலையில் குமந்தான்மேடு முதல் பெரிய கங்கணாங்குப்பம் வரை சுமார் 1 கி.மீ தூரத்திற்கு ஆற்றின் கரையோர பகுதி உள்ளது. மீண்டும் தென்பெண்ணை ஆற்றல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குமந்தான்மேடு வடக்கு கரையோர பகுதியில் மண் அரிப்பு அதிகரித்து கரை பகுதிகள் பலவீனமாகி வருகிறது.

இதனால் மீண்டும், குமந்தான்மேடு, கங்கணாங்குப்பம் ஆற்றங்கரைப் பகுதியில் உடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது அப்படி உடைப்பு ஏற்பட்டால் மீண்டும் கரையோரப் பகுதிகளில் வெள்ளம் புகும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். உடனடியாக இப்பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து மண்ணரிப்பை தடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பெண்ணையாற்றில் மீண்டும் வெள்ள பெருக்கு கரைப்பகுதிகள் உடையும் அபாயம் appeared first on Dinakaran.

Read Entire Article