கோலார்,
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள முல்பாகல் தாலுகாவில் மனநலம் குன்றிய பெண்ணைக் கொன்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆட்டோ டிரைவர் சையது சுகேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி நள்ளிரவில் சையது சுகேல், ஆட்டோவில் மார்க்கெட் பகுதியில் சென்றுள்ளார். அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண், அந்த வழியாக நடந்து சென்றபோது, அவரை சையது சுகேல் லிப்ட் கொடுப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளார். அப்போது ஆட்டோ பள்ளிகர பாளையா நோக்கி செல்லாமல், தேசிய நெடுஞ்சாலை நோக்கி சென்றது.
இதனை கவனித்த அந்த பெண், அவருடன் தகராறு செய்ததுடன், ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார். இதையடுத்து ஆட்டோவை நிறுத்திய சையது சுகேல், அந்த பெண்ணின் தலையில் கல்லால் தாக்கி உள்ளார். இதில் காது, தலையில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் அந்த பெண்ணின் உடலை ஆட்டோவில் ஏற்றிய சையது சுகேல், ஹைதாரி நகருக்கு கொண்டு சென்றார். இதையடுத்து அங்கு வைத்து இறந்த உடலை சையது சுகேல் பலாத்காரம் செய்து தனது வக்கிர புத்தியை காட்டி உள்ளார். அதன்பிறகு உடலை சாலையோரம் இருந்த காலி இடத்தில் வீசிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர், பள்ளிகர பாளையாவை சேர்ந்த 50 வயதான மனநல பாதிக்கப்பட்ட பெண் என்பது தெரியவந்தது. . இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக, சிக்பள்ளாப்பூரில் பதுங்கி இருந்த ஆட்டோ டிரைவர் சையது சுகேலை போலீசார் கைது செய்தனர்.