பெண்ணுக்கு நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை: ரேலா மருத்துவமனை அசத்தல்

4 weeks ago 4

தாம்பரம்: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் இருபக்க நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் 8 வயதாக இருந்தபோது, காசநோய் தொற்று ஏற்பட்டதும், ஆரம்பத்தில் சொந்த ஊரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவரது நிலைமை மோசமானதால் 24 மணி நேரமும் ஆக்சிஜன் உதவி அவருக்கு தேவைப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்ததும் தெரிந்தது.

இந்நிலையில் மூளைச்சாவடைந்த ஒருவரின் நுரையீரல்கள் தஞ்சாவூரிலிருந்து சேகரிக்கப்பட்டு, திருச்சிக்கு சாலை வழியாகவும், அதைத் தொடர்ந்து சென்னைக்கு விமான மூலமும் ரேலா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு ரேலா மருத்துவமனையின் இதய மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை மற்றும் இதய மார்பறை அறுவை சிகிச்சை துறையின் இயக்குனர் ஸ்ரீநாத் விஜயசேகரன் மற்றும் உறுப்பு மாற்று நுரையீரல் பிரிவின் கிளினிக்கல் லீடு ஐஸ்வர்யா ராஜ்குமார் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொண்டனர்.

இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது ரேலா மருத்துவமனையின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகமது ரேலா கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் 2 ஆண்டுகளாக மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மூன்று வயதிலிருந்து நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு 10 அடி கூட நடந்து செல்ல முடியாமல், மாடிப்படி ஏற முடியாமல், கழிவறைகளுக்கு ஆக்சிஜன் உதவி இல்லாமல் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தார். அப்படியே அவதிப்பட்டு வந்த அந்த பெண்ணுக்கு 2 வாரத்திற்கு முன்பு நுரையீரல் உறுப்பு மாற்று செய்யப்பட்டு நலமுடன் உள்ளார்.

இந்த மாதிரி ஒரு சிக்கலான சிகிச்சை வெற்றிகரமாக செய்து தற்போது அந்த பெண் குணமடைந்து ஆக்சிஜன் உதவி இல்லாமல், யாருடைய உதவியும் இல்லாமல் அவராகவே நடந்து செல்லும் அளவிற்கு அந்த பெண் முன்னேற்றம் அடைந்துள்ளார். இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் உறுப்பு தானம் செய்வதில் பெரும்பாலானோர் தயாராக உள்ளனர். இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 200 உடல் உறுப்பு தானங்கள் நடைபெற்று உள்ளது. இருந்தாலும் அதிகளவில் மூளைச்சாவுகள் ஏற்பட்டு வருகிறது ஆனால் சிலர் மூளைச்சாவு அடையும்போது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முன் வருவதில்லை. அதுபோன்று இல்லாமல் உடல் உறுப்புகளை தானம் செய்தால் ஏழு உயிர்களை காப்பாற்றலாம் என்ற நிலை அனைவருக்கும் புரிந்தால் இன்னும் அதிகமாக உடல் உறுப்பு மாற்று சிகிச்சை செய்து அதிகளவிலான உயிர்களை காப்பாற்றலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post பெண்ணுக்கு நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை: ரேலா மருத்துவமனை அசத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article