* இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த பெண்ணாடத்தில் பிரளயகாலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் முன்பகுதியில் கோயிலுக்கு சொந்தமான திருக்குளம் அமைந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், இந்த குளத்தை புனிதமாக கருதி பக்தர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக குளத்தின் அருகில் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பு செய்வதும், அருகில் உள்ள குடியிருப்பு வீடுகளின் கழிவுநீர் அனைத்தும் இந்த குளத்தின் விடுவதுமாக இருந்து வந்தது.
மேலும் இந்த குளத்தின் அருகில் கடந்த 15 வருடத்திற்கு முன், பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் இரண்டு மாடி கட்டண கழிப்பறை கட்டப்பட்டது. இதற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவித்ததுடன் கடந்த 3 வருடத்திற்கு முன், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தொடர்ந்து விசாரணை செய்து கழிவறை கட்டிடத்தை பேரூராட்சி நிர்வாகம் தானாக முன்வந்து அகற்ற வேண்டும் என கடந்த 14.2.2024ல், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்த நிலையில், கடலூர் இந்து சமய அறநிலைய துறையின் இணை ஆணையர் ஜோதி உத்தரவின்பேரில், கடலூர் உதவி ஆணையர் சந்திரன், ஆலய நிலங்கள் வட்டாட்சியர் செந்தில்குமார், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் மாலா, பெண்ணாடம் பிரளய காலேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் மகாதேவி, திட்டக்குடி சரக ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.
முன்னதாக கட்டிடத்தை இடிப்பதற்கு அதிகாரிகள் வந்து தயார் நிலையில் இருந்த போது அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் அப்பகுதியில் கழிவறை வேண்டும், அதனால் இடிக்க கூடாது என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த பின் கட்டிடம் முழுவதையும் இடித்து அகற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post பெண்ணாடத்தில் பிரளயகாலேஸ்வரர் கோயில் இடத்தில் கட்டப்பட்ட கழிவறை கட்டிடம் இடித்து அகற்றம் appeared first on Dinakaran.