கோலாலம்பூர்: மலேசியாவில் ஐசிசி பெண்கள் யு19 உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. அதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய பெண்கள் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று இலங்கை பெண்கள் அணியை சந்தித்தது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்தியா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 118 ரன் மட்டுமே எடுத்தது.
தொடக்க வீராங்கனை கொங்கடி திரிஷா 49 (44பந்து, 5பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன் விளாசினார். இலங்கையின் பிரமுடி, லிமன்சா, அசேனி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 119 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி, இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 4.2 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 33 ரன் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து நிதனாமாக ஆடிய இலங்கை அணி 20 ஓவரும் தாக்குப்பிடித்து 9 விக்கெட் இழப்புக்கு 58 ரன் மட்டுமே எடுத்தது.
இதனால் இந்தியா அணி 60 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. 3 லீக் ஆட்டங்களிலும் வென்ற இந்தியா ஏ பிரிவு புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து, சூப்பர்-6 சுற்றுக்கும் முன்னேறியது. லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்து விட்டன. ஏ பிரிவில் 2,3 வது இடங்களை பிடித்த இலங்கை(4புள்ளிகள்), வெஸ்ட் இண்டீஸ்(2புள்ளிகள்) உட்பட ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த தலா 3 அணிகளும் சூப்பர்-6சுற்றுக்கு முன்னேறியது. சூப்பர் சுற்று ஆட்டங்கள் நாளை முதல் நடைபெறும்.
சூப்பர்-6 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்
* ஏ பிரிவு: இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ்
* பி பிரிவு: இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து
* சி பிரிவு: தென் ஆப்ரிக்கா, நைஜிரியா, நியூசிலாந்து,
* டி பிரிவு: ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஸ்காட்லாந்து
The post பெண்கள் யு19 உலகக் கோப்பை சூப்பர் சிக்சில் இந்தியா appeared first on Dinakaran.