சென்னை: சென்னை பல்கலைக்கழக குற்றவியல் துறை சார்பில், இந்திய குற்றவியல் சங்கத்தின் 6வது சர்வதேச மற்றும் 45வது அகில இந்திய குற்றவியல் மாநாட்டை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: அமைச்சர் கோவி செழியன் பேசும்போது ஆண்மை என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இங்கு ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்கிறார்கள். இங்கு ஆணுக்கு பெண் சரிசமம் என குறிப்பிட விரும்புகிறேன். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன.
சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டத்திருத்தம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கில் பெறப்படும் நல்ல கருத்துக்களை செயல்படுத்துவதில் இந்த அரசு முழு மனதுடன் தயாராக உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கையில் வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்கள் அதிக அளவில் காவல்துறையில் இருக்கும் இடத்தில் தமிழ்நாடு 3வது இடத்தை பிடித்திருப்பதும் வரவேற்கத்தக்கது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை தீட்டிவருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறையும், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் சமூகவியல் துறை, கிரெசென்ட் சட்டக் கல்லூரியின் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை, முன்னாள் டிஜிபி நாயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
The post பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பது தமிழகத்தில்தான்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.