துபாய்,
9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் லாரா வால்வாட் 40 ரன்களும் , தாசிம் பிரிட்ஸ் 43 ரன்களும், மரிசேன் காப் 43 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 137 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஸ்காட்லாந்து அணி தென் ஆப்பிரிக்காவின் அபார் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் ஸ்காட்லாந்து அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 86 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 80 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து தரப்பில் அதிகபட்சமாக கேத்ரின் ப்ரேசர் 14 ரன் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோத உள்ளன.