துபாய்,
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து, 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 110 ரன்கள் எடுத்தது. பின்னர் 111 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 56 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன், அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றியை வசப்படுத்தினால் மட்டுமே இந்தியாவுக்கு ரன்ரேட் அடிப்படையில் அரைஇறுதி வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழலில் பாகிஸ்தானின் வெற்றிக்காக நமது நாட்டு ரசிகர்களும் பிரார்த்தனை செய்தனர். ஆனால் 111 ரன் இலக்கை நெருங்க கூட முடியாமல் பாகிஸ்தான் சரணாகதியாகி விட்டது.
இதையடுத்து ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியின் அரைஇறுதி கனவு கலைந்தது. இதுவரை எந்த உலகக் கோப்பையையும் வெல்லாத இந்திய பெண்கள் அணிக்கு இந்த தடவையும் சோகமே மிஞ்சியுள்ளது. கடந்த மூன்று உலகக் கோப்பை போட்டிகளில் குறைந்தது அரைஇறுதி வரை முன்னேறி இருந்த இந்திய அணி இந்த தடவை பரிதாபமாக லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது.