பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதுகாப்புக்கு அதிக நிதி தேவை தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: நிதி ஆணையக் குழுவிடம் திமுக பிரதிநிதிகள் கோரிக்கை

1 month ago 4

சென்னை: 16வது நிதிக் குழுவுடன் நேற்று வர்த்தகம் மற்றும் தொழில், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துரையாடினர். முதலாவதாக, வர்த்தகம் மற்றும் தொழில் உறுப்பினர்களுடனான கூட்டம் நடைபெற்றது. இதில், வீல்ஸ் இந்தியா லிமிடெட் மற்றும் சி.ஐ.ஐ. மாநில தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம், ஜி.ஆர்.ஜி. நிறுவனங்கள் மற்றும் சந்திரா குழும நிறுவனங்களின் தலைவர் நந்தினி ரங்கசாமி, கேடலின்க்ஸ் பங்குதாரர் ராம்குமார் ராமமூர்த்தி, பினாக்கிள் இன்போடெக் தலைவர் பிமல் பட்வாரி, ராம்கோ நிர்வாக இயக்குநர் வெங்கட்ராமராஜா, ட்ரிவிட்ரான் ஹெல்த் கேர் தலைவர் ஜி.எஸ்.கே.வேலு, டைம்லர் இந்தியா வணிக வாகனங்கள் நிர்வாக இயக்குனர் சத்யகம் ஆர்யா, பொன் தூய கெமிக்கல்ஸ் தலைவர் பொன்னுசாமி, எஸ்.ஐ.எம்.ஏ. தலைவர் எஸ்.கே.சுந்தரராமன், டான்ஸ்டியா தலைவர் சி.கே.மோகன், கொடிசியா தலைவர் கார்த்திகேயன், கே.எச்.எக்ஸ்போர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் தலைவர் அப்துல் வஹாப் ஆகியோர் கலந்து கொண்டனர். அடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்களுடனான கூட்டம் நடைபெற்றது.

இதில், சென்னை, திருச்சி, திருப்பூர் மேயர்கள் உள்பட நகராட்சி, உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. சார்பில் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., அ.தி.மு.க. சார்பில் கட்சியின் அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார், வக்கீல் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில துணை செயலாளர் நா.பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் வஹிதா நிஜாம், தே.மு.தி.க. சார்பில் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் கே.நல்லதம்பி, வக்கீல் அணி துணை செயலாளர் எஸ்.ஜனார்தனன், காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத் துறை தலைவர் ஆனந்த் சீனிவாசன், பா.ஜனதா சார்பில் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் பி.ஆனந்தன், நிர்வாகி கே.ஜெய்சங்கர், ஆம் ஆத்மி கட்சி மாநில பொதுச் செயலாளர் இ.ஜோசப் ராஜா, மாநில குழு உறுப்பினர் இ.ஸ்டெல்லா மேரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தி.மு.க. சார்பில் வழங்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பதால், வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கையும், மற்றவர்களை சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதிகம் பேர் வயது முதிர்வு வரம்புக்குள் வருவதால், சுகாதாரம், ஓய்வூதியம், மூத்த குடிமக்களுக்கான சேவைகள் கணிசமாக அதிகரிக்கிறது. இது அரசுக்கு நிதி சுமையை ஏற்படுத்துவதுடன் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டியது உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், அதிக நிதி ஒதுக்க வேண்டியது இருக்கிறது. உயர் கல்வியை தரமானதாக வழங்க அதிக நிதி தேவைப்படுகிறது. நகரமயமாக்கல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கான கட்டமைப்புகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான சேவைகளுக்கும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டியது உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதுகாப்புக்கு அதிக நிதி தேவை தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: நிதி ஆணையக் குழுவிடம் திமுக பிரதிநிதிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article