சென்னை: முட்டுக்காட்டில் பெண்கள் சென்ற காரை துரத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி கைதான நிலையில், இவ்வழக்கு தொடர்பாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி: முட்டுக்காடு இசிஆர் சாலையில், கடந்த மாதம் 25ம் தேதி அதிகாலை 3 மணியளவில், பெண்கள் சென்ற காரை, மற்றொரு காரில் சென்று இளைஞர்கள் வழிமறித்து, தகராறில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தனர். இந்த, வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து கானத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்புகாரின்பேரில், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இவ்வழக்கில் 7 குற்றவாளிகளை கண்டறிந்தனர். அதில், 4 பேர் கைதான நிலையில், தற்போது மற்றொரு முக்கிய குற்றவாளியான சந்துருவை கைது செய்துள்ளோம். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகிறோம்.
கைதான சந்துரு மீது ஏற்கனவே கடத்தல், பண மோசடி உள்ளிட்ட வழக்குகள் இரண்டு காவல் நிலையங்களில் உள்ளன. மேலும், சந்துரு 2019ல் டிப்ளமோ இன் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படித்துள்ளார். நிரந்தரமான தொழில் எதுவும் கிடையாது, செல்போன் கடை வைத்து வந்துள்ளார். வாடிக்கையாளிடம் சரியான முறையில் செல்போன் கொடுக்கவில்லை என மோசடி வழக்கு உள்ளது. இப்போது, வண்டி வாகனங்கள் வாங்குவது, விற்பது என தொழில் செய்து வருகிறார். சந்துருவின் தாய் மாமா அதிமுகவை சேர்ந்தவர். சந்துருவின் தாத்தா மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கார் ஓட்டுநர் என கூறப்படுகிறது. இந்த வழக்கு சம்பந்தமாக புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வோம். கூடிய விரைவில் மற்ற 2 குற்றவாளிகளை கைது செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். சந்துருவின் தாய் மாமா அதிமுகவை சேர்ந்தவர். சந்துருவின் தாத்தா எம்ஜிஆரின் கார் ஓட்டுநர் என கூறப்படுகிறது.
The post பெண்கள் காரை துரத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி அதிமுக பிரமுகர் உறவினர்: பள்ளிக்கரணை துணை ஆணையர் பேட்டி appeared first on Dinakaran.