பெண்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மெக்னீசியம்!

7 hours ago 2

உடல் செயல்பாட்டுக்கு மெக்னீசிய சத்து அவசியம். குறிப்பாக பெண்களின் ஆரோக்கியத்தில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலில் மெக்னீசியம் குறைந்தால் பல ஆரோக்கியப் பிரச்னைகள் உண்டாகும். மெக்னீசியம் என்பது மனித உடலில் உள்ள ஒரு அடிப்படை கனிமம். இது 300க்கும் மேற்பட்ட உயிர் வேதியியல் எதிர்வினைகளின் ஒரு பகுதியாக உள்ளது. உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமான மெக்னீசியம். என்சைம்களுக்கான இணைக்காரணியாகச் செயல்படுகிறது. அதனால் பூரதத் தொகுப்பு செயல்முறைகள் முதல் தசை செயல்பாடுகள் வரை அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.மெக்னீசியம், அடினோசின் டிரை பாஸ்போட்டை உற்பத்தி செய்ய உதவும்போது, உணவு ஆற்றலை மாற்றப்படுவதை உறுதி செய்கிறது. மெக்னீசியம் குறைபாடு பெண்களின் ஆரோக்கியத்தை அதிகம் பாதிக்கிறது. வயது வந்த பெண்ணுக்கு அடிப்படை உயிரியல் செயல்பாடுகளை செய்ய தினசரி அடிப்படையில் 350 மில்லிகிராம் மெக்னீசியம் தேவைப்படுகிறது.

பெண்களுக்கு மெக்னீசியம் ஏன் தேவை?

50 சதவீதத்துக்கும் அதிகமான மெக்னீசயம் எலும்புகளில் குவிந்துள்ளது. இந்த கனிமத்தின் பற்றாக்குறை முதலில் எலும்புகளை பாதிக்கிறது. கர்ப்பத்தின் போதும், பாலூட்டும் போதும், பெண்களின் உடலுக்கு மெக்னீசியத்தின் தேவை அதிகரிக்கிறது. ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவது முதல் எலும்புகளின் நிலை வரையிலும், மாதவிடாய், கர்ப்பம் உள்ளிட்ட வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் மெக்னீசியம் முக்கிய பங்கு வகிக்கிறது.பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையை கொடுப்பதில் திறன் கொண்டது மெக்னீசியம். பொதுவாக ஹார்மோன்கள் சீரற்ற நிலையால் தான் முறையற்ற மாதவிடாய், தைராய்டு, சர்க்கரை, ஹேப்பி ஹார்மோன்களில் மாற்றங்கள் என பல பிரச்னைகள் உருவாகும். பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் மனநிலை மாற்றங்கள் வயிற்று வலி மற்றும் உடல் தசைப் பிடிப்புகள் போன்ற பொதுவான பிரச்னைகளை சந்திக்கின்றனர். இவை ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் அளவுகள் ஏற்ற இறக்கத்தால் ஏற்படுகின்றன. ஆனால் மெக்னீசியம் இந்த ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துகிறது.

பல பெண்களுக்கு எலும்பு ஆரோக்கியம் முக்கிய பிரச்னையாக உள்ளது. தாய்மார்கள் தங்களின் கருத்தரித்த காலம் முதல் பாலூட்டும் காலம் வரையில் எனக் கணக்கிட்டால் தங்கள் வாழ் நாளுக்குத் தேவையான கால்சியத்தின் மிகப்பெரும் பங்கை இழக்கிறார்கள். இதனால்தான் 30 வயதைக் கடந்தாலே எலும்பு, மூட்டு தேய்மானங்கள், முதுகு, இடுப்பு வலி, என பல பிரச்னைகள் உண்டாகின்றன. குறிப்பாக மாதவிடாய் காலத்தின் போது எலும்பு நோய்களுக்கான ஆபத்து அதிகரிக்கிறது. எனவே எலும்புகளை பராமரிக்க போதுமான கால்சியத்தை கிரகிப்பதை ஊக்குவிக்க மெக்னீசியம் உதவுகிறது. இது வைட்டமின் டியின் அதன் செயல் பாட்டை முழு வடிவத்திற்கு மாற்றுகிறது. இதனால் கால்சியம் வளர்சிதை மாற்றத்தை உறுதி செய்கிறது. எலும்பு அடர்த்திக்கு உதவுகிறது.

இவை தவிர, கருவில் உள்ள குழந்தையின் நரம்பு மண்டலத்தின் சரியான வளர்ச்சியை உறுதி செய்வதில் மெக்னீசியம் முக்கிய பங்குவகிக்கிறது. ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. இதன் மூலம் கர்ப்பகால நீரிழிவு நோய்க்கு எதிராக பாதுகாப்பு அரணாக உள்ளது. கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்துக்கும், அவர்களின் குழந்தையின் சரியான வளர்ச்சிக்கும் மெக்னீசியம் மிகவும் முக்கியமானது. மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கிறது. இதயத்துடிப்பை பராமரிக்கிறது. அதே நேரத்தில் தமனிக்குள் அடைப்புகள் உருவாவதை தடுக்கிறது. பெண்களுக்கு உயர் ரத்த அழுத்த வாய்ப்பைக் குறைக்கவும், அவர்களின் இதய நிலையை மேம்படுத்தவும் மெக்னீசியம் உதவுகிறது என்று மருத்துவ ஆய்வுகள் நிரூபித்துள்ளன.எனவே, மெக்னீசிய சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை உட்கொள்வதை பெண்கள் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

மெக்னீசியம் நிறைந்த உணவுகள்

சோயா பால் கொண்டு உருவாக்கப்பட்ட டோஃபு, சால்மன் மீன், வாழைப் பழம், வறுத்த எள், பாதாம், புரோக்கோலி, பூசணி விதை, கருப்பு பீன்ஸ், அவகோடா பழம் இவைகளில் அதிக அளவிலான மெக்னீசியம் சத்து நிறைந்திருக்கிறது. இவற்றை வாரம் இரு முறை ஏதேனும் வகையில் சமைத்தோ, அல்லது நேரடியாகவோ எடுத்துக்கொள்ள பலன் கிடைக்கும்.
– அ.ப. ஜெயபால்.

The post பெண்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மெக்னீசியம்! appeared first on Dinakaran.

Read Entire Article