பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

3 months ago 21

சார்ஜா,

9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த போட்டி தொடரில் 'ஏ' பிரிவில் இதுவரை நடந்துள்ள 3 லீக் ஆட்டங்கள் முடிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி (இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தானுக்கு எதிராக) தொடர்ச்சியாக 3 வெற்றிகளை ருசித்து 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரன்-ரேட்டில் (+2.786) நல்ல நிலையில் இருக்கும் அந்த அணி ஏறக்குறைய அரைஇறுதியை உறுதி செய்து விட்டது. எல்லா ஆட்டத்திலும் தோற்ற இலங்கை அணி அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டது. எஞ்சிய ஒரு இடத்துக்கு இந்தியா (4 புள்ளி), நியூசிலாந்து (4 புள்ளி), பாகிஸ்தான் (2 புள்ளி) அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் இன்று இரவு சார்ஜாவில் நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இதில் வெற்றி பெறுவதுடன், ரன்-ரேட்டிலும் நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஏனெனில் இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அதேவேளையில், நியூசிலாந்து அணியும் தனது இறுதி லீக்கில் (பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்) வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து அணிகள் தலா 6 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது யார் அரைஇறுதிக்கு முன்னேறுவது என்பதை 'ரன்-ரேட்' தான் தீர்மானிக்கும்.

 

இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 25-ல் ஆஸ்திரேலியாவும், 7-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

இந்தியா: ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா, சஜீவன் சஜனா, அருந்ததி ரெட்டி, ஸ்ரேயங்கா பட்டீல், ஆஷா சோபனா, ரேணுகா சிங்.

ஆஸ்திரேலியா: அலிசா ஹீலி (கேப்டன்) அல்லது கிரேஸ் ஹாரிஸ், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, ஆஷ்லிக் கார்ட்னெர், போபி லிட்ச்பீல்டு, ஜார்ஜியா வார்ஹம், தாலியா மெக்ராத், அனபெல் சுதர்லேண்ட், சோபி மோலினெக்ஸ், மேகன் ஸ்கட், அலானா கிங்.

இங்கிலாந்து-ஸ்காட்லாந்து

சார்ஜாவில் இதே மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஸ்காட்லாந்து (பி பிரிவு) அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 2 வெற்றி (வங்காளதேசம், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக) பெற்று அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. ஸ்காட்லாந்து அணி 3 ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வி கண்டு அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்டது.

Read Entire Article