பெண்களை பாடாய்ப்படுத்தும் சினைப்பை நீர்க்கட்டிகள்.. சித்த மருத்துவத்தில் சிறந்த தீர்வுகள்

12 hours ago 1

பெண்களை அச்சுறுத்தும் ஆரோக்கிய பிரச்சினைகளில் சினைப்பை நீர்க்கட்டிகளும் ஒன்று. சினைப்பை நீர்க்கட்டிகள் என்பது "பி.சி.ஓ.எஸ்" ,"பி.சி.ஓ.டி" என இரு வகைப்படும்.

ஒவ்வொரு மாதமும், மாதவிடாயின் மத்திய பகுதியில், வலது அல்லது இடது சினைப் பைகள் மாறி மாறி ஒரு முதிர்ந்த முட்டையை இனப்பெருக்கத்திற்காக வெளியேற்றுகிறது. இது இயல்பான ஒன்று.

"பி.சி.ஓ.டி"-பாதிப்பில் முதிராத முட்டை, அல்லது முட்டை அதிகமாக வளர்ச்சி அடைந்து நீர்க்கட்டியாக மாறுகிறது. நீர்க்கட்டி என்பது ஒரு மூடிய பையினுள் நீர் நிறைந்து நிற்பது ஆகும்.

"பி.சி.ஓ.எஸ்" என்பது முதிர்ச்சி இல்லாத முட்டை, நீர்க்கட்டி இவற்றுடன் உடல் பருமன், முகப்பரு, முகத்தில் ரோமங்கள் வளர்ச்சி, டைப் 2 நீரிழிவு, மாதவிடாய் பிரச்சனைகள், குழந்தைப் பேறடைவதில் சிரமம் போன்ற பல குறி குணங்கள் சேர்ந்து காணப்படும் .

காரணங்கள்:

சினைப்பை நீர்க்கட்டி எதனால் வருகிறது என்று குறிப்பிடும்படியான காரணம் எதையும் கூறமுடியாது. பல வகைகளில் நீர்க்கட்டி வருகிறது.

1. கணையம் சுரப்பிக்கக் கூடிய இன்சுலின் ஹார்மோனை, உடலில் உள்ள செல்கள் சரியாக பயன்படுத்தாமல் எதிர்ப்பதால் கணையம் இன்னும் அதிகமான இன்சுலினை உற்பத்தி செய்கின்றது. இந்த அதிகப்படியான இன்சுலின் ஆண்மைக்குரிய ஆன்ட்ரோஜன் ஹார்மோனை அதிகமாக சுரப்பிக்கின்றது. இது சினை முதிர்ச்சி அடைந்து வெளியாவதை தடுக்கின்றது.

2. சினைப்பைகள் அதிகளவில் "ஆன்ட்ரோஜன்" ஹார்மோனை சுரப்பிக்கச் செய்து, பெண்மைக்குரிய புரோஜஸ்டிரான் ஹார்மோன் சுரப்பைக் குறைக்கிறது.

3. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியானது, உடலின் உறுப்புகளையே பாதிப்படையச் செய்வதாலும், சினைப்பை பாதிப்படைந்து இந்நோய் ஏற்படுகிறது.

4. முல்லரின் ஹார்மோனின் சமச்சீர் அற்ற செயல்பாடு, புரோலாக்டின் அதிகரித்த நிலை, எல்.ஹெச் ஹார்மோனின் ஒழுங்கற்ற செயல்பாட்டினாலும் இந்நோய் ஏற்படுகிறது

5. பாரம்பரியம் சார்ந்த காரணிகளாலும் சினைப்பை நீர்க்கட்டி நோய் வருகின்றது.

நோய் குறிகுணங்கள்:

கீழ்க்காணும் குறிகுணங்களில் ஒன்றிரண்டோ அல்லது சில குறிகுணங்கள் மொத்தமாக சேர்ந்தோ இருக்கலாம். பல குறிகுணங்களின் தொகுப்பைத் தான்"சிண்ட்ரோம்" என்று கூறுகிறோம்.

* ஹார்மோன்களின் ஒழுங்கற்ற செயல்பாடுகளால் ஏற்படும் உடல் பருமன்.

* ஒழுங்கற்ற மாதவிடாய், மாத சுழற்சி ஒன்றிரண்டு மாதங்கள் வராமல் இருக்கலாம். இடையிடையே குருதிப்போக்கு நிகழலாம்.

* மாதவிடாய் நேரத்து அடிவயிற்று வலி

* மாதவிடாய் சுழற்சி நடைப்பெற்றாலும், சினைமுட்டை முதிர்ச்சியின்மை அல்லது சினை முட்டை பெரிதாக வளர்ந்தும் உடையாமல் இருக்கலாம்.

* ஆன்ட்ரோஜன் ஹார்மோனின் அதிகரிப்பால் முகத்தில் முடி வளருதல், தலைமுடி உதிர்வது, முகப்பரு போன்ற குறிகுணங்கள் காணப்படும்.

சினைமுட்டை வளர்ச்சி அடைந்து உடையாமல் நீர்க்கட்டிகளாக மாறுவதால் சினைப்பை அளவில் பெரிதாகக் காணப்படும். வளர்சிதை மாற்றக் குறைபாட்டால் டைப் 2 நீரிழிவு, ரத்தத்தில் கொழுப்பு அதிகரித்தல், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். உறக்கமின்மை, மனச் சோர்வு, மன அழுத்தம் ஏற்படலாம். குழந்தையின்மையும் ஏற்படலாம்.

தீர்வு :

* சோயா பீன்ஸ் தினசரி வேகவைத்து சாப்பிட வேண்டும். சோயா பீன்ஸில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன் கர்ப்பப்பை, சினைப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு ஓர் சிறந்த உணவாகும்.

* எள்ளுருண்டை, வெந்தயக்களி, உளுந்தங்களி இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

"பிளாக்ஸ் சீட்" எனப்படும் அலிசி விதைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

* சதக்குப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் இந்த மூன்று மருந்துகளையும், சம அளவில் எடுத்து பொடித்து பனை வெல்லத்தில் வைத்து மூன்று மாத காலம் உட்கொள்ளலாம்.

* அசோக மரப்பட்டை, கழற்சிக்காய் இரண்டும் சம அளவு எடுத்து சிறிதளவு மிளகு சேர்த்து பொடித்து காலை, இரவு வெந்நீர் அல்லது தேனில் மூன்று மாத காலம் உட்கொள்ளலாம்.

* கற்றாழை ஜெல்லுடன் இஞ்சி சேர்த்து மோரில் கலந்து காலையில் குடிக்க வேண்டும்.

* தினமும் பகல் வேளையில் வெண்பூசணி சாறு குடிக்கலாம்.

* பப்பாளிப் பழச் சாறு இரவு வேளைகளில் குடிக்கலாம்.

* சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் மூன்றையும் சம அளவில் பொடித்து காலை 2கிராம், இரவு 2கிராம் வீதம் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக எடுக்கலாம்.

* மலைவேம்பு இலைச் சாறு 5மிலி வீதம் வாரம் ஒரு முறை அதிகாலையில் குடித்து வரலாம்.

* கழற்சிக் கொட்டை 1, மிளகு 3 இவைகளை பொடித்து பசுமோரில் கலந்து குடிக்க வேண்டும்.

* குமரி லேகியம் -1-2 கிராம் தினமும் இருவேளை சாப்பிட வேண்டும்.

* சதாவேரி லேகியம் -1-2 கிராம் தினமும் இருவேளை சாப்பிட வேண்டும்.

* தினமும் நடை பயிற்சி, இலகுவான விளையாட்டு பயிற்சிகள், கருப்பை, இடுப்பு தசைகளை பலப்படுத்தும் ஹெகல் பயிற்சி செய்ய வேண்டும்.

* மன அழுத்தம், சோர்வு, கவலை குறைய பிராணாயாமம், தியானம், இறை பிரார்த்தனைகள் செய்யலாம்.

 

Read Entire Article