பெண்களை கட்டிப்பிடித்தும், ஆடைகளை இழுத்தும் ஹோலி கொண்டாட்டத்தில் பாலியல் அத்துமீறல்கள்: சமூக ஊடகங்களில் வீடியோ வைரல்

4 hours ago 2

புதுடெல்லி: ஹோலி கொண்டாட்டத்தில் பெண்களை கட்டிப்பிடித்தும், ஆடைகளை இழுத்தும் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக சமூக ஊடகங்களில் வீடியோ வைரலாகி உள்ளது. நாடு முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. குறிப்பாக வடமாநிலங்களிலும் வடமாநில மக்கள் வசிக்கும் பகுதியிலும் ஹோலி பண்டிகை கொண்டாப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருபாலரும் ஒருவர் மீது ஒருவர் வர்ணங்களை பூசிக் கொண்டு ஹோலியை உற்சாகமாக கொண்டாடினர்.

அதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் சமூக ஊடகங்களில் சில ஆட்சேபனைக்குரிய வீடியோக்களும் வெளியாகி உள்ளன. ஹோலி பண்டிகையின் போது ஒருவர் மீது ஒருவர் வர்ணம் பூசிக் கொள்ளும் போது, சாலைகளில் செல்லும் பெண்கள், உறவுக்கார பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்படுகின்றன. இதுதொடர்பான வீடியோக்களுக்கு பலரும் விமர்சனம் வைத்துள்ளனர். அதில் ஒருவர், ‘உங்கள் கலாசாரத்தைக் கொண்டாடுங்கள்; ஆனால் கழுகு போல பெண்களை கொத்தாதீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘ஹோலி பண்டிகை என்ற பெயரில் பெண்களைத் துன்புறுத்துவதை நிறுத்துங்கள்; உங்களின் சகோதரிகள், மனைவிகள் அல்லது மகள்களை இவ்வாறு செய்தால் அமைதியாக இருப்பீர்களா?’ என்று விமர்சித்துள்ளார். மேலும் மற்றொருவர், ‘உங்களின் போக்கிரித்தனத்தை நியாயப்படுத்தும் வகையில் ஹோலி கொண்டாடப்படுகிறது.

ஹோலியின் போது வீட்டில் இருந்து வெளியே செல்ல பெண்கள் பயப்படுகின்றனர்’ என்று கூறியுள்ளார். அதேபோல், ‘பாலியல் சேட்டைகளை ஊக்குவிக்கும் இதுபோன்ற கலாசார விழாக்களுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளது. மற்றொருவர், ‘பெண்களின் மீது சாயப் பவுடர்களை தடவுவது, அவர்களை கட்டிப்பிடிப்பது, அவர்களின் ஆடைகளை பிடித்து இழுப்பது போன்ற காட்சிகள் மனதை துன்புறுத்துகின்றன’ என்று கூறியுள்ளனர். இருந்தாலும் ஹோலி பண்டிகையில் இதுபோன்ற விளையாட்டுகள் சகஜம் என்றும், அறிமுகமான உறவுக்கார பெண்களிடம் தான் இதுபோன்ற விளையாட்டுகள் இருக்கும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post பெண்களை கட்டிப்பிடித்தும், ஆடைகளை இழுத்தும் ஹோலி கொண்டாட்டத்தில் பாலியல் அத்துமீறல்கள்: சமூக ஊடகங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Read Entire Article