பெண்களை கட்டாயப்படுத்தி துறவறமா? ஈஷா மையத்தில் அதிகாரிகள் விசாரணை: ஐகோர்ட்டில் விரைவில் அறிக்கை தாக்கல்

1 month ago 12

கோவை: பெண்களை கட்டாயப்படுத்தி துறவறமா? என்ற புகாரில் ஐகோர்ட் உத்தரவின்படி ஈஷா யோகா மையத்தில் சமூகநலத்துறை அதிகாரிகள், போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘‘எனது 2 மகள்கள் கீதா மற்றும் லதா ஆகியோர் ஈஷா யோகா மையத்தில் யோகா கற்றுக்கொள்ள சென்றவர்கள் அங்கேயே தங்கி விட்டனர்.

எனது மகள்கள் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக தெரிய வருகிறது. அவர்களை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஈஷா யோக மையம் நடத்தும் ஜக்கி வாசுதேவிற்கும் ஒரு மகள் இருக்கிறார். அவர் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்க சாமியார் ஜக்கி வாசுதேவ் அனுமதி தந்துள்ளார். எனது மகள்கள் ஈசா யோகா மையத்திலிருந்து வெளிவந்தால் அவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம். அவர்களுக்கென தனி இடத்தை கொடுத்து அவர்களுடைய தனிமை பாதுகாக்கப்படும்.

எனவே, இரு மகள்களை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” என கோரி இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மகள்கள் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். அப்போது நீதிபதிகள் வழக்கு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் ஈஷா யோகா மையம் மீது எத்தனை குற்ற வழக்குகள் உள்ளது? என்பன போன்ற விவரங்களை போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

விசாரணையை வருகிற 4ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர். ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரி அம்பிகா தலைமையிலான குழுவினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஈஷா யோகா மையத்துக்கு நேற்று சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.

மையத்தில் உள்ள தன்னார்வலர்கள், வெளிநாட்டில் இருந்து இங்கே வந்து தங்கியிருப்பவர்கள், அவர்களுக்கு மையத்தில் வழங்கப்படும் பாதுகாப்பு, விருப்பத்தின் அடிப்படையில் இங்கே தங்கியிருக்கிறார்களா?, கட்டாயப்படுத்தி துறவறத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்களா? போன்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர்.

மேலும் மையத்தில் தங்கியிருப்பவர்கள் தங்களது உறவினர்களை சந்திக்க முறையாக அனுமதி வழங்கப்படுகிறதா?, கட்டாயத்தின் பேரில் சட்ட விதிமுறைக்கு மாறாக யோகா மையம் செயல்பட்டு வருகிறதா? என்ற விவரங்களையும் போலீசார், சமூக நலத்துறையினர் சேகரித்தனர். விசாரணை அறிக்கையை போலீசார் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.

The post பெண்களை கட்டாயப்படுத்தி துறவறமா? ஈஷா மையத்தில் அதிகாரிகள் விசாரணை: ஐகோர்ட்டில் விரைவில் அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Read Entire Article