பெண்களே படியுங்கள் … படியுங்கள்… உங்களுக்கு தேவையான அனைத்தும் நான் செய்து தருகிறேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கம்

3 weeks ago 5

தூத்துக்குடி : தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் உயர்கல்வி செல்லும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டு பெண்கள் இந்தியாவிலேயே முதன்மையான இடத்தில் இருக்கிறீர்கள். உயர்கல்வியிலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பெண்கள் முதன்மையான இடத்தில் இருக்கிறீர்கள். ஆயிரக்கணக்கான மாணவிகளை ஒரே இடத்தில் பார்ப்பது பெருமையாக உள்ளது. பெண்கள் யாரையும் எதிர்பார்க்காமல் தங்களது சொந்த பொருளாதார பலத்துடன் இருக்க வேண்டும் என்பது பெரியாரின் கனவு ஆகும். கல்வியை பொறுத்தவரையில் பெண்கள்தான் முன்னிலையில் உள்ளனர்.

50 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் படிப்பதில் தடைக்கற்கள் இருந்தன. பெண்களை படிக்க வைத்தால் பண்பாட்டை இழந்துவிடுவார்கள் என்ற மூடநம்பிக்கை இருந்தது. கல்விக்கான ஏராளமான முன்னெடுப்புகள் நீதிக்கட்சி ஆட்சியில் எடுக்கப்பட்டது. சாதி, மதம், இனம் என மக்களை பிரிக்கும் ஒரு கூட்டம் இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் உயர்கல்வி முடித்து வேலைக்கு செல்வதில் தமிழ்நாட்டு பெண்கள்தான் முன்னிலையில் உள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. திமுக ஆட்சியில்தான் ஏராளமான பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. மருத்துவத்துறையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதற்கு கலைஞர்தான் காரணம்.

1969 முதல் 1975 வரை 97 அரசுக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளை தொடங்கியவர் கலைஞர். திராவிட மாடல் அரசு மகளிருக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. படிப்புக்கு மட்டுமல்ல பெண்கள் வளர்ச்சிக்கு எந்த தடை வந்தாலும் நான் உடைப்பேன். புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வியில் பல மாணவிகள் சேர்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். உயர்கல்விக்கும் ஆராய்ச்சி படிப்புக்கும் திராவிட மாடல் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக வளர்ச்சி. பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் நான் முதல்வன் திட்டத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பாரதி கண்ட கனவை புதுமை பெண் திட்டத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளோம். உயர்கல்வி பெறாத பெண்களே இல்லை என்ற நிலை வரும் வரை ஓயமாட்டேன். பெண்களே படியுங்கள் … படியுங்கள்… உங்களுக்கு தேவையான அனைத்தும் நான் செய்து தருகிறேன்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post பெண்களே படியுங்கள் … படியுங்கள்… உங்களுக்கு தேவையான அனைத்தும் நான் செய்து தருகிறேன் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article