இன்று ஸ்மார்ட்போன் இல்லாத வாழ்வை எவராலும் கற்பனை செய்யக் கூட முடியாது. பலர் இரவில் கடைசியாக கண் மூடுவதும், காலையில் முதலில் கண் விழிப்பதும் ஸ்மார்ட் போனில்தான். ஆனால் இரவில் வெகுநேரம் ஸ்மார்ட் போனில் நேரத்தை செலவிட்டால் என்ன ஆகும் தெரியுமா?இரவில் உறங்கும் முன் அதிக நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் போது, போனில் இருந்து வரும் நீல வெளிச்சம் உறக்கத்தை ஏற்படுத்தும் மெலனின் உற்பத்தியை குறைக்கிறது.இதனால் உறக்கம் சீர்குலைந்து, மூளைக்கு ஓய்வு கிடைக்காமல் நாளடைவில் பல உடல் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடலாம். இரவில் உறக்கம் இல்லாதவர்கள் பலதையும் யோசிப்பார்கள்.
இரவில் அதிக நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் நபர்களுக்கு இயல்பாகவே மன அழுத்தம் உண்டாகும். இதனால் அதிக கவலை மற்றும் எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படும்.இரவில் உறங்குவதற்கு தாமதமானால், அதிகாலை எழுவது மிகவும் கடினம். இதனால் நாம் மறுநாளுக்காக வைத்திருக்கும் திட்டம் அனைத்தும் பாழாகி விடும்.இரவில் கண்கள் உறக்கத்தை இழப்பதால் கண் வறட்சி, கண் சோர்வு மற்றும் பார்வை மங்கல் போன்றவை ஏற்படும். இத்தகைய சிக்கல்கள் உங்கள் பார்வை ஆரோக்கியத்தை பாதித்து நீண்ட கால கண் பிரச்னைக்கு வழிவகுக்கலாம்.எனவே பொதுவாகவே ஸ்மார்ட் போன் பார்க்கும் நேரத்தை குறைத்துக் கொள்வதும், இரவில் தூங்குவதற்கு வெகு நேரத்துக்கு முன்பே அதற்கு விடை கொடுப்பதும் முக்கியம்.
– அ.ப.ஜெயபால்
The post பெண்களே இரவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதீர்கள் appeared first on Dinakaran.