பெண்களின் செல்ஃப் கேர் ‘0’வாக உள்ளது!

5 months ago 15

 

நன்றி குங்குமம் தோழி

பெண்களுக்கு மல்டிடாஸ்கர் என்று மற்றொரு பெயர் உள்ளது. வேலைக்கும் போவார்கள்; வீட்டில் உள்ளவர்கள் மற்றும் வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களின் நலனை கவனித்துக் கொள்கிறார்களா? என்றால் அதற்கான விடை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ‘நான் நல்லாதான் இருக்கேன். டயர்டா இருந்தா ஒரு மாத்திரை போட்டா சரியாகிடும்’ என்பார்கள். சொல்லப்போனால் பெண்களின் செல்ஃப் கேர் ஜீரோ என்றுதான் சொல்ல வேண்டும். தங்களைப் பற்றி கவனிக்காமல் இருந்தால், நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் வண்டி ஒருநாள் நின்றுவிடும். அதனால் பெண்கள் ஒவ்வொருவரும் செல்ஃப் கேர் எடுத்துக்கொள்வது அவசியம் என்கிறார் டாக்டர் அருணா மோகன்.

குழந்தை நல பல் மருத்துவரான இவர் ‘கேப்ஸ்டோன்’ என்ற பெயரில் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் ஒன்றை தன் கணவருடன் இணைந்து நிர்வகித்து வருகிறார். அனைத்து மருத்துவமும் ஒரே கூரைக்குள் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இதனை துவங்கி நடத்தி வருகிறார். இவர் பெண்கள் தங்களின் உடல் மேல் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து விவரித்தார்.‘‘நான் குழந்தை நல பல் மருத்துவர், 30 வருடமாக நான் மருத்துவ துறையில் இருக்கிறேன்.

இந்த கிளினிக் ஆரம்பிக்க காரணம் என்னிடம் சிகிச்சைக்காக வருபவர்கள் பொது நலம் , சருமம், பல்… அனைத்தும் சார்ந்த மருத்துவம் ஒரே இடத்தில் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றார்கள். குறிப்பாக வயதானவர்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதன் பெயரில் தான் நானும் என் கணவரும் இணைந்து இதனை துவங்கினோம். மேலும் தொழில்நுட்பம் வளர்ச்சியால் நாம் மருத்துவ துறையில் பல மடங்கு உயர்ந்து இருக்கிறோம்.

ஆனால் அந்த வளர்ச்சியால் நாம் நோயாளிகளின் பிரச்னை என்ன என்பதை பார்க்க மறந்துவிடுகிறோம். சில சமயம் தலைவலி என்றால் அதற்கான சிகிச்சை தான் பார்க்கிறார்களே தவிர அந்த நபரின் அடிப்படை பிரச்னை என்ன என்பதை கவனிப்பதில்லை. முன்பு குடும்ப டாக்டர்னு ஒருவர் இருப்பார். அவருக்கு உங்களைப் பற்றி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்தும் தெரியும். பிரச்னை என்று சொன்னால் போதும் உடனடியாக எந்த நிபுணரை சந்திக்க வேண்டும் என்று ஆலோசனை அளிப்பார்.

அது எல்லாம் இப்போது மறைந்துவிட்டது. இதனால் தலைவலி வந்த உடனே அது சம்பந்தமான நிபுணரை சந்திக்கிறோம். பிரச்னை இல்லாத பட்சத்தில் மன உளைச்சல் என்று கூறுகிறார்கள். ஆனால் தலைவலி ஏற்பட தலையில்தான் பிரச்னை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பல்லில் பாதிப்பு இருந்தாலும் தலைவலிக்கும். இதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். எங்களின் கிளினிக்கில் முதலில் பொது மருத்துவர்தான் பிரச்னையை அனலைஸ் செய்வார். அதன் பிறகு குறிப்பிட்ட நிபுணரை பரிந்துரைப்பார்’’ என்றவர் பிரிவென்டிவ் ஹெல்த் செக்கப் ஏன் அவசியம் என்பது குறித்து தெரிவித்தார்.

‘‘பலர் பிரிவென்டிவ் ஹெல்த் செக்கப் அவசியமான்னு கேட்பாங்க. பிரச்னை இல்லாத போது ஏன் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் கேள்வி. இது மிகவும் அவசியம் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் எடுக்க வேண்டும், குறிப்பாக பெண்கள். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் இளம் வயதினரையும் பாதிக்கிறது. இதனை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான சிகிச்சையை எடுப்பதன் மூலம் அதனால் ஏற்படக்கூடிய மற்ற பிர்சனைகளை தவிர்க்கலாம். பெண்களைப் பொறுத்தவரை 50 வயதிற்கு மேல் அவர்கள் சந்திக்கும் மெனோபாஸ் குறித்த விஷயங்களை மட்டும்தான் பார்க்கிறார்கள். ஆனால் அவர்களின் மனநிலை குறித்து யாரும் சிந்திப்பதில்லை.

திருமணம் ஆன நாள் முதல் அவர்கள் குடும்பம், வேலை என அனைத்தும் பார்த்துக் கொள்கிறார்கள். அம்மா, தங்கை, மனைவி, அக்கா என அனைத்து கதாபாத்திரங்களாகவும் இருக்கிறார்கள். இதனால் நான் சூப்பர் வுமன் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைத்துக் கொள்கிறார். அதனால் தம்முடைய உடலை பார்த்துக் கொள்ள தவறுகிறார்கள். இவ்வளவு காலம் ஓடிக் கொண்டிருந்தவர்கள், குழந்தைகள் வளர்ந்து அவரவர் வேலைகளை பார்க்க ஆரம்பித்தவுடன் எம்டினெஸ் சின்ட்ரோம் என்ற பிரச்னையை சந்திக்கிறார்கள். அதாவது, எந்த வேலையும் இல்லை, என்ன செய்வதுன்னு புரியாமல் டிப்ரஷனுக்கு ஆளாகிறார்கள். சில பெண்கள் 50 வயதிற்கு பிறகு எனக்கு எல்லா கடமையும் முடிந்துவிட்டது. அதனால் நான் எனக்குப் பிடித்த விஷயங்களை செய்கிறேன்னு முன்வருவாங்க. இந்த சதவிகிதம் மிகவும் குறைவு.

அடுத்து பெண்கள் சந்திக்கும் பிரச்னை சிறுநீர் பாதையில் தொற்று. பெண்கள் மெனோபாஸ் நிலையை அடையும் போது அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களால் இது போன்ற பிரச்னையை சந்திப்பார்கள். ஆனால் அதை வெளிப்படுத்த தயங்குகிறார்கள். சிலர் ஸ்ட்ரெஸ் இன்கான்டினென்சால் அவதிப்படுவார்கள். வேகமாக இறுமினாலோ அல்லது தும்மினாலோ சிறுநீர் கசிவு ஏற்படும். உடற்பயிற்சியின்மையால் ஏற்படும் தசை தளர்வு. அதற்காக ஜிம் போக வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டிலேயே சின்னச் சின்ன உடற்பயிற்சிகள் அல்லது நடைப்பயிற்சி செய்யலாம்.

இதையும் வெளியே சொல்ல தயங்க காரணம் ேவறு பெரிய பிரச்னைக்கு கொண்டு சென்றுவிடும் என்ற பயம்’’ என்றவர் உடலில் ஏற்படும் பிரச்னைகளை தடுக்க தடுப்பூசி இருப்பதாக தெரிவித்தார்.‘‘ஒவ்வொரு பிரச்னைக்கும் தடுப்பூசிகள் உள்ளன. அது பற்றி பலருக்கு தெரிவதில்லை. ஃப்ளூ என்பது சளி மற்றும் ஜுரத்தை கொடுக்கக்கூடிய ஒரு வகையான வைரஸ் நோய். இதற்கு தடுப்பூசி உள்ளது. சாதாரண சளி என்றாலும், இது வயதானவர்களை பெரிய அளவில் பாதிக்கும். அதே போல் அக்கி நோய். இதற்கும் தடுப்பூசி உள்ளது. ஆனால் இது குறித்து பெண்கள் பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை.

காரணம், தடுப்பூசி போட்டுக் கொண்டால், ஜுரம் வரும். அதனால் வீட்டு வேலைகள் இரண்டு நாள் தடைபடும் என்று நினைக்கிறார்களே தவிர நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இந்த தடுப்பூசி உதவும் என்பதை மறந்துவிடுகிறார்கள். இதெல்லாம் நாங்க எங்க மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது மட்டுமில்லாமல் அதை அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தையும் கூறுகிறோம்.

இந்த தடுப்பூசிகள் 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குதான். வயதாகும் போது உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி குறையும். இரண்டாவது நாம சின்ன வயசில் எடுத்துக் கொண்ட தடுப்பூசிகள் வயதான பிறகும் பாதுகாப்பு அளிக்காது. ஆனால் ஊசிதான் அப்பவே போட்டாச்சேன்னு நினைக்கிறோம். நிமோனியாவிற்கான தடுப்பூசி 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். வயதானவர்களுக்கு சளி பிரச்னை ஏற்படும் போது அது நிமோனியாவாக மாற வாய்ப்புள்ளது.

கர்ப்பிணிகள் உட்பட ஒவ்வொரு வயதிற்கும், பிரச்னைக்கு ஏற்ப தடுப்பூசிகள் உள்ளன. வெளிநாட்டிற்கு குறிப்பாக ஆப்ரிக்காவிற்கு செல்பவர்களுக்கு யெல்லோ ஃபீவருக்கான தடுப்பூசி போடுவார்கள். இது அங்குள்ள தொற்று. அதனை இந்தியாவிற்கு திரும்பி வரும் போது கொண்டு வரக்கூடாது என்பதற்காக போடுவார்கள். அதேபோல் டெட்டனெஸ் டிப்தீரியா பர்டூசெஸ்க்கான தடுப்பூசி இருக்கு. இதனை 15 வருடங்களுக்கு ஒருமுறை எடுக்க வேண்டும். தடுப்பூசிகள் எடுப்பதால் பக்கவிளைவுகள் ஏற்படாது. ஜுரம் மற்றும் ஊசி போட்ட இடத்தில் வலி இருக்கும். சில தடுப்பூசிகள் ஒரு தடவை எடுத்தால் போதும். சிலவற்றுக்கு பூஸ்டர் போட வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை வரும் முன் காப்போம் என்பதுதான். பிரச்னையை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தவிர்க்காமல் உரிய காலத்தில் ஆய்வு செய்து அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டால் ேநாயினை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்ைசயை எடுத்துக் கொள்ளலாம்’’ என்று ஆலோசனை வழங்கினார் டாக்டர் அருணா மோகன்.

தொகுப்பு: நிஷா

 

The post பெண்களின் செல்ஃப் கேர் ‘0’வாக உள்ளது! appeared first on Dinakaran.

Read Entire Article