திண்டிவனம், நவ. 5: திண்டிவனம் அருகே பெண் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் சரசு (38), விவசாய தொழிலாளி. இவரது கணவர் மோகன் கடந்த 7 வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்துவிட்டதால், சரஸ் தனது மகன் நரேன்குமார், மகள் ஜெயகாந்தி ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சரசு மற்றும் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு பக்கத்து தெருவில் உள்ள உறவினர் பிரபாகரன் என்பவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டினுள் சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 20 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது. அதே பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியது.
இதுகுறித்து சரசு, ஒலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் உதவியுடன் குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் இருக்குமென தெரிகிறது.
The post பெண் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை appeared first on Dinakaran.