கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே குப்பச்சிபாறை பகுதியை சேர்ந்தவர் பிரபு (40), திருமணமாகாதவர். முதுகலை பட்டதாரியான இவர் விவசாயம் செய்து வந்தார். மேலும் வீடியோ கேமராமேனாகவும் பணியாற்றி வந்தார். இவருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் கோவிந்தராஜ், ஜெயமணி (35) தம்பதிக்கும் இடையே பாதை தகராறு தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் பிரபு, ஜெயமணியை கத்தியால் குத்தினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில் ஜெயமணியின் படத்தை குரங்கு போல் மார்பிங் செய்து வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பிரபு வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ஜெயமணி, ஊர் பெரியவர்களிடம் தெரிவித்து பிரபுவை அழைத்து கண்டிக்கும்படி தெரிவித்தார். அதன்படி ஊர் பெரியவர்கள் கடந்த 7ம்தேதி பேச்சுவார்த்தைக்கு பிரபுவை அழைத்தனர். ஆனால் அவர் வரவில்லை.
இதனால் அவரை அழைத்து வருவதற்காக ஜெயமணி தரப்பை சேர்ந்த வருண் (42), ராகவேந்திரன்(38) ஆகியோர் மாலை 3 மணியளவில் பிரபு வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர்களுடன் செல்ல மறுத்து பிரபு தகராறு செய்தார். சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து வருண், ராகவேந்திரன் ஆகியோர் மீது வீசியுள்ளார். தகவலறிந்த ஜெயமணி மற்றும் அவரது தரப்பை சேர்ந்த கணேசன் (36), வனராஜா (53), சந்தோஷ்குமார், கோபி (35) ஆகியோர் பிரபுவின் வீட்டுக்கு சென்று, வருண், ராகவேந்திரன் ஆகியோருடன் சேர்ந்து பிரபுவை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் படுகாயமடைந்த பிரபுவை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு உயிரிழந்தார். இதுதொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் கொலை வழக்கு பதிந்து ஜெயமணி, கணேசன், வனராஜா, கோபி, வருண், ராகவேந்திரன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
The post பெண் படத்தை மார்பிங் செய்த பட்டதாரி அடித்துக்கொலை: 6 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.