திருநெல்வேலியில் பிறந்து திருமணத்திற்கு பிறகு சிங்கப்பூரில் வசித்து வந்தவர், தனது குழந்தைகள் நலனுக்காக தமிழகத்திற்கு திரும்ப வந்ததோடு தனது தொழில் முனைவோர் கனவுகளை தொடர நினைத்து ஆரம்பித்த டயமண்ட் நேச்சுரல் மூலமாக இன்று அழகியல் சார்ந்த பொருட்களை தயாரித்து வருவதோடு தனது அம்மா ராமலட்சுமி உடன் இணைந்து ஆரோக்கியமான உணவுப்பொருட்களையும் தயாரித்து வருகிறார் வைரப்பிரியா. அழகு சாதனப் பொருட்களாகட்டும், உணவு சார்ந்த பொருட்களாகட்டும் ஆரோக்கியத்திற்கு மட்டுமே முன்னுரிமை என சமூகப்பொறுப்புகளுடன் சொல்கிறார். அழகு சாதனப்பயிற்சிகளை சிங்கப்பூரில் முடித்து விட்டு தமிழகத்தில் தொழில் துறையில் கால்பதித்திருக்கும் வைரப்பிரியா தனது தயாரிப்புகள் குறித்தும் பாரம்பரிய உணவுகள் குறித்தும் நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார்.
உங்கள் தொழில் முனைவோர் கனவு குறித்து சொல்லுங்கள்?
ஒரு சிறந்த பெண் தொழில்முனைவோராக வேண்டும் என்பது எனது சிறுவயது முதலான கனவு தான். நான் டிகிரி படித்து முடித்தபின் திருமணத்திற்கு பிறகு கணவருடன் சிங்கப்பூரில் வசித்து வந்தேன். அங்குதான் எனது அழகு சாதனப் பொருட்களுக்கான தொழில் பயிற்சியினை முறைப்படியாக கற்றுக்கொண்டேன். அதன் பிறகு குழந்தை பிறப்பு வளர்ப்பு என்கிற காரணமாக தமிழகம் திரும்பியதும் எனது தொழில் முனைவோர் கனவு திரும்பவும் வெற்றிகரமாக துவங்கியது. எனது கனவிற்கு எனது கணவரும் பெற்றோரும் மிகுந்த உதவியாக இருந்து வந்தனர். கணவர் பணி காரணமாக சிங்கப்பூரில் வசிக்க , இரண்டு சிறு குழந்தைகளுடன் இங்கு வசித்து வரும் எனக்கு தொழிலில் பெரிதும் உதவியது எனது தந்தையார் தான். சமீபத்தில் அவர் இறந்து போக தற்போது அம்மாவின் உதவியுடன் எனது தொழிலை தொடர்ந்து செய்து வருகிறேன். நான் கற்றுக்கொண்ட அழகு சாதனப் பொருட்களுக்கான தயாரிப்புகளை நானே நேரிடையாக செய்து வருகிறேன். பாரம்பரிய உணவு சார்ந்த பொருட்களுக்கான தயாரிப்பில் அம்மா ராமலட்சுமி பெரிதும் உதவி வருகிறார். எனது தந்தையின் ஆசியுடன் எனது தொழில் தற்போது நல்ல நிலையை அடைந்து வருகிறது. எனது பெண் தொழில் முனைவோர் கனவு நிறைவேறியதுடன் அடுத்த கட்டத்தினை சிறப்பாக எட்டி வருவது மகிழ்ச்சியான விஷயமாக இருக்கிறது. இரண்டு சிறு குழந்தைகளின் தாய் என்பதோடு , தொழில் முனைவோர் என்கிற இரட்டைப் படகில் சுவாரஸ்யமாக பயணித்து வருவதில் நிறையவே மகிழ்ச்சி தான்.
பாரம்பரியமான உணவு சார்ந்த பொருட்களை தயாரிப்பது குறித்து சொல்லுங்கள்?
நாங்கள் 30 வகையான பாரம்பரிய அரிசி வகைகளில் கூழ் வற்றல் வடாம் வகைகளை தயாரித்து தருகிறோம். பாரம்பரிய அரிசி வகைகளில் கூழ் வற்றல் எங்களிடம் மட்டுமே கிடைக்கிறது என்பது தனிச்சிறப்புகள் தான். கருப்புக் கவுனி அரிசி, சிவப்புக்கவுனி அரிசி , மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய அரிசி வகைகளில் கறுப்பு மற்றும் வெள்ளை நிற வற்றல்களை செய்து விற்பனை செய்கிறோம். அதே போன்று தாளிப்பு வடகத்தினை சின்ன வெங்காயம் கறுப்பு உளுந்து மாவு சேர்த்து ஸ்பெஷலாக தயாரித்து தருகிறோம். குழந்தைகளுக்கு தரக்கூடிய சத்துமாவினை தயாரித்து அளிக்கிறோம். அதில் 70 வகையான சத்துக்கள் நிறைந்த பொருட்களை பயன்படுத்தி தயாரித்து அளிக்கிறோம். மில்லட் மாவில் பிரௌனி தயாரிப்பது மற்றும் க்ரீம் கேக் , டார்க் சாக்லேட் போன்றவற்றை ஒரிஜினல் சாக்லேட் பவுடர் பயன்படுத்தி ஆரோக்கியமான வகைகளில் தயாரித்து தருகிறோம். பெண்களுக்கு ஹார்மோன்களை நன்றாக பேலன்ஸ் செய்யக்கூடிய சத்தான பயோட்டின் லட்டுகளை தயாரித்து அளிக்கிறோம். வெள்ளரி விதை பூசணி விதை சேர்த்த மிக சத்தான இனிப்பு வகை இது. இதனை தவிர சுண்டைக்காய் வற்றல் மற்றும் பாகற்காய் வற்றல் போன்றவற்றையும் தயாரித்து அளித்து வருகிறோம். இவை அனைத்தும் நாங்கள் தயாரித்து பயன்படுத்தி பார்த்தபின்பே விற்பனைக்கு கொண்டு வருவோம். எங்கள் பொருட்கள் சுவையோடு ஆரோக்கியத்தினையும் தருவதால் அதற்கான வரவேற்பு என்பது மிக சிறந்த ஒன்றாகவே இருக்கிறது. நல்ல பொருட்களுக்கு நிரந்தரமான வாடிக்கையாளர்கள் உண்டு.
அழகுசாதனப் பொருட்களை தயாரிப்பதன் தனிச்சிறப்புகள் என்ன?
வெட்டிவேர் ரோஸ்மேரி ஆவாரம் பூ போன்றவற்றினை ஹாட்ராஸில் முறையில் சாறெடுத்து பாட்டில் விற்பனை செய்கிறோம். இது அழகு சாதனப் பொருட்களாகவும் பயன்படுத்தி வரலாம். சர்பத் போன்று ஜூஸ் செய்தும் குடிக்கலாம். இதனை தலைக்கும் முகத்துக்கும் பயன் படுத்தினால் நல்ல பலனை கொடுக்கும். அதே போன்று எங்களது தயாரிப்பான சோப்புகள் மார்க்கெட்டில் கிடைக்கும் சாதாரண வகை சோப்புகள் போல் அல்லாமல் இயற்கையான பொருட்களை சாறெடுத்து அதனை 90 நாட்கள் நொதிக்க செய்து அதில் பல்வேறு வகைகளிலான சோப்பினை தயாரித்து அளிக்கிறோம். இது சருமத்திற்கு கூடுதல் பலனை தரும். தற்போது 14 வகை சோப்புகளை தயாரித்து வருகிறேன். தற்போது புதிய முயற்சியாக தலைக்கு தேய்க்கும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் வகைகளை சோப்பு பார்களை போல தயாரித்து தருகிறோம். தற்போது 50 க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். ஏராளமான வாடிக்கையாளர்கள் என்னிடம் இத்தகைய பொருட்களை வாங்கி பயன்படுத்தி பலனடைந்து வருகிறார்கள். எங்கள் பொருட்கள் குறிப்பாக குழந்தைகளுக்கான பொருட்கள் அனைத்துமே தரப் பரிசோதனை சான்றிதழ் பெற்றது என்பது சிறப்பம்சம்.
தொழிலில் உங்கள் அடுத்த கட்ட திட்டங்கள் என்ன?
தற்போது நிறைய வியாபார ஸ்டால்கள் மற்றும் மகளிர் குழுக்கள் மூலமாக பொருட்களை விற்பனை செய்து வருகிறேன். சமூகவலைத்தளங்களில் எங்கள்தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எங்கள் தயாரிப்புகளுக்கு தொடர்ந்த வாடிக்கையாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தற்போது 50 க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து வருகிறோம். மேலும் நிறைய புதிய முயற்சிகள் நவீன தொழில்நுட்ப பயிற்சிகள் மூலமாக அதிக பொருட்களை தயாரித்து அளிக்க வேண்டும் என்பது எனது ஆசைகள். இதற்கான பயிற்சி வகுப்புகள் எடுக்க வேண்டும் என்பதும் எனது ஆசை. தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்கிற எண்ணங்கள் இருக்கிறது. தற்போது உணவு சார்ந்த பொருட்கள் தயாரிப்பில் எனது அம்மா பெருமளவு உதவி வருகிறார். நான் விற்பனை மற்றும் பொருட்கள் அனுப்பும் வேலைகளை கவனித்து வருகிறேன்.
தற்போது எங்கள் பொருட்களுக்கான வரவேற்பு உள்ளூர் நண்பர்கள் மட்டுமல்லாது எங்கள் சிங்கப்பூர் நண்பர்கள் மூலமாகவும் கிடைத்து வருகிறது. அதன் மூலம் தொடர்ந்த வாடிக்கையாளர்கள் எங்களிடம் பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். தரமான தயாரிப்புகள் எப்போதுமே கவனம் பெறுவது இயல்பு தான். அரசு நடத்தும் ஸ்டால்கள் மூலமாகவும் எங்களுக்கு விற்பனை வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அதே போன்று நொதிக்க வைத்து சோப்புபொருட்களை தயாரிப்பதும் நாங்கள் மட்டும்தான். எந்த ஒரு தொழிலையும் துவங்கும் போது நிறைய சவாலாகத்தான் இருக்கும். கடுமையான முயற்சிகளுடன் குறிக்கோளை நோக்கி தன்னம்பிக்கையுடன் தளராமல் உழைத்தால் பெண்களுக்கான வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். எந்த ஒரு முயற்சிகளுடன் முறையான பயிற்சிகளையும் பெற்றுக்கொள்ளுங்கள் அதன் மூலம் வரும் எந்த சவாலையும் துணிவுடன் ஏற்கலாம் என தன்னம்பிக்கை மிளிர பேசுகிறார். தற்போது மகளிர் தினத்திற்கென சிறந்த தொழில் முனைவோர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதில் பெரும் மகிழ்ச்சியென புன்னகையுடன் சொல்லும் வைரப்பிரியா தடைகளை வென்று பல்வேறு சாதனைகளை படைக்க வாழ்த்தி விடை பெற்றோம்.
– தனுஜா ஜெயராம்.
The post பெண் தொழில் முனைவோர் ஆவதே லட்சியம் – வைரப்பிரியா! appeared first on Dinakaran.