புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலைவழக்கில் கொல்கத்தா போலீசால் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்க்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆகஸ்ட் 9ம் தேதி இரவு பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீஸ் தன்னார்வலரான சஞ்சய் ராயை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஒன்றரை மாதங்களாக இது தொடர்பாக சிபிஐ போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சஞ்சய் ராய்க்கு எதிராக சிபிஐ போலீசார் நேற்று கொல்கத்தா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிககையை தாக்கல் செய்தனர். இதில் பெண் மருத்துவர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை. சஞ்சய் ராய் மட்டுமே இந்த குற்றத்தை செய்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* மருத்துவர்கள் 3வது நாளாக உண்ணாவிரதம்
பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கோரி 6 ஜூனியர் மருத்துவர்கள் சனியன்று மாலை முதல் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இவர்களின் போராட்டம் நேற்று மூன்றாவது நாளாக நீடித்தது. எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும்வரை எங்களது போராட்டத்தை தொடர்வோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அரசிடம் இருந்து இதுவரை எந்த செய்தியும் வரவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
The post பெண் டாக்டர் பலாத்கார கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்: கொல்கத்தா போலீஸ் கைது செய்த சஞ்சய் ராய் மட்டுமே குற்றவாளி appeared first on Dinakaran.