பெண் குழந்தை பராமரிப்பு… கம்ப்ளீட் கைடு!

2 months ago 21

நன்றி குங்குமம் டாக்டர்

தேவதைகள் வாழும் வீடு என்றால் அது பெண்கள் குழந்தைகள் இருக்கும் வீடுதான். பெண் குழந்தைகள் எவ்வளவு ஸ்பெஷலோ அதைப் போலவே பெண் குழந்தைகளைப் பராமரிப்பதும் ஸ்பெஷலான விஷயம்தான். ஏனெனில், பெண் உடல் ஒவ்வொரு பருவத்திலும் அதற்கான மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டே இருப்பது. மழலை முதல் மழைக் கால மலர் வனமாய் பூத்துக்குலுங்கும் இளமை வரை பெண் குழந்தைப் பராமரிப்பில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்.

தாய்ப்பால்

பிறந்த குழந்தைக்கு ஒன்றரை வயது வரை தாய்ப்பால் கொடுத்து வளர்ப்பது மிகவும் நல்லது. தாய்ப்பாலில் அடிப்படையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் குழந்தையின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைய மிகவும் அவசியம். ஆண் குழந்தைகளோடு ஒப்பிடும்போது பெண் குழந்தைகளுக்கு மிக சீக்கிரத்திலேயே தாய்ப்பால் நிறுத்தப்படுகிறது என்று மத்திய அரசின் ஆய்வு ஒன்று கவலை தெரிவித்துள்ளது.

உண்மையில் உடல் ரீதியாக ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கே தாய்ப்பால் அதிகம் தேவைப்படுகிறது. பெண் குழந்தை வளர்ந்த பிறகு அதன் மாதவிடாய் காரணங்களால் ரத்தசோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் வசதியான வீட்டுப் பெண்களுக்குக்கூட ரத்தசோகைப் பிரச்சனை உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். ஒரு குழந்தையை கருவுற்று ஆரோக்கியமாக பெற்றுத் தருவதற்கு ஏற்ற உடல் மற்றும் மனவலிமை ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியம். இதற்கு, பெண் என்பவள் குழந்தையாக இருக்கும்போதே போதுமான தாய்ப்பால் கொடுத்து அவள் உடலை ஆரோக்கியமாக்க வேண்டியது அவசியம்.

பெண்குழந்தைத் தூய்மை

பெண் குழந்தைகளைக் குளிப்பாட்டும்போதும் அதன் மல,ஜலம் கழித்த பிறகு கழுவிவிடும்போதும் கவனமாக இருங்கள். குழந்தையின் முன்புறத்தை சுத்தம் செய்துவிட்டு பிறகுதான் பின்புறத்தை சுத்தமாக்க வேண்டும். பெண் குழந்தையின் பிறப்புறுப்பின் அமைப்பால் அவர்களுக்கு மிக எளிதாக நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. பின்புறத்தைச் சுத்தம் செய்துவிட்டு முன்புறம் சுத்தம் செய்யும்போது மலக்குழாய் பகுதிகளில் உள்ள நோய் கிருமிகளால் பிறப்புறுப்பில் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், சிறுநீரக நோய்த் தொற்று முதல், வாந்தி, பேதி, தீவிரமான தொற்றுக்கள் வரை ஏற்படக்கூடும் என்பதால் கவனம்.

தடுப்பூசிகள்

ஒரு குறிப்பிட்ட வயது வரை ஆண் பெண் குழந்தைகளுக்கு இடையிலான தடுப்பூசிகளில் எந்த வித்தியாசம் இல்லை. ஆனால், பெண்களுக்கு ஹூயூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமி மூலம் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு சமீபமாக அதிகரித்துவருவதால் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது வயதுக்குப் பிறகு இதற்கான தடுப்பூசி உரிய மருத்துவரின் ஆலோசனையுடன் போட்டுக்கொள்ளலாம்.

Good Touch; Bad Touch சொல்லிக் கொடுங்கள்

பெண் குழந்தைகளைத் தொட்டுப் பேசும்போது கவனமாக இருங்கள். அவர்களுக்கு குட் டச்; பேட் டச் எது என்று சொல்லிக்கொடுங்கள். குழந்தையின் தலையை வருடுவது, கன்னத்தைத் தொடுவது, கைகளைத் தொடுவது தவறு இல்லை அவை குட் டச். குழந்தையின் மார்பைத் தொடுவது, தொடைப் பகுதிகளைத் தொடுவது, பின்புறத்தைத் தொடுவது, வலிப்பது போல அழுந்தங் கிள்ளுவது போன்ற செய்கைகள் எல்லாம் பேட் டச். இவற்றை நீங்களும் செய்யாதீர்கள். மற்றவர்கள் செய்யவும் அனுமதிக்க விடாதீர்கள்.

யாராவது ஒருவர் அவர் நமக்கு எவ்வளவு முக்கியமான நண்பர், உறவினராக இருந்தாலும் அப்படியான பேட் டச்கள் செய்தால் உடனே அங்கிருந்து நீங்கள் இருக்கும் இடத்துக்கு வந்துவிடச் சொல்லிக்கொடுங்கள். இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்முறையைத் தவிர்க்கலாம். குழந்தைகளுக்கு வாயில் முத்தமிடாதீர்கள். கன்னத்தில், நெற்றியில் முத்தமிடலாம். வாயில் முத்தமிடும்போது சில சமயங்களில் நம் உடலின் கிருமிகள் குழந்தையின் உடலுக்கு நுழைய வாய்ப்புள்ளது. மேலும், வாயில் முத்தமிடும் பழக்கம் எல்லா தருணத்திலும் நல்லது அல்ல. அதை நீங்கள் அல்லாத வேறு ஒருவர் செய்யும் போது அதைச் சரி; தவறு எனப் பிரித்தரிய அவர்களால் முடியாது. பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண் குழந்தைகள் பலர் இப்படியான தவறான வழிகாட்டுதல்கள் கிடைக்கப்பட்டவர்கள்தான்.

ஆடைகள் கவனம்

பெண் குழந்தைகளுக்கான ஆடைகள் விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். பெண் குழந்தைகள் சீக்கிரமே வளரும் இயல்புள்ளவர்கள் என்பதால் அவர்களுக்கு அடிக்கடி ஆடைகள் மாற்ற வேண்டியது இருக்கும். குறிப்பாக, சிறுமிப் பருவத்தை நெருங்கிய பிறகு வேகமாக வளரத் தொடங்குவார்கள். பழைய உடைகள் அணியும்போது அவை உடலுக்கு இறுக்கமான தோற்றத்தை ஏற்படுத்தும். எனவே, அந்தந்த உடல்வாகுக்கு ஏற்ற ஃபிட்டான உடைகளை அணிவிக்கச் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

நாகரிகமான, கண்ணியமான உடை ரசனை எப்போதுமே பாதுகாப்பானது. ஒருவர் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவரவர் சுதந்திரம்தான். ஆனால், பெண் குழந்தைகளுக்கான ஆடைகள் யார் கண்ணையும் உறுத்தாத்தாக அவர்களின் அழகையும் கம்பீரத்தையும் மேம்படுத்துவதாக் இருப்பதுவே நல்லது.

தொகுப்பு: இளங்கோ கிருஷ்ணன்

பூப்பெய்தும் காலம்

பூப்பெய்தும் பருவம் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியமான காலக்கட்டம். இது குறித்து பெண் குழந்தைக்கு இருக்கும் சந்தேகங்கள், அச்சங்கள் இயல்பானவை. அவற்றை நீக்கி அது குறித்த முழுமையான தகவல்களைச் சொல்லி, மன தளவில் அந்தக் குழந்தையைப் பெண்மைக்குத் தயாராக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோருக்கும் முக்கியமான கடமை.

பெண்ணின் உடலில் உள்ள சினைப்பையில் ஈஸ்ட்ரோஜென் உள்ளிட்ட பெண்மைக்கான ஹார்மோன்கள் சுரக்கத் தொடங்கும் பருவத்தையே பூப்பெய்துதல் என்கிறோம். இதனால், சினைப்பையில் கருமுட்டைகள் வளர்ச்சி அடைந்து, இனப்பெருக்கத்துக்குத் தயாராகும். சுமார் 28 நாட்கள் முதல் 40 நாட்களுக்குப் பிறகு அந்தக் கருமுட்டைகள் முதிர்ச்சியடைந்து வெளி ஏறுவதால் உதிரப்போக்கு ஏற்பட்டு மாதவிலக்கு எனும் உடலியல் நிகழ்வு ஏற்படுகிறது.

பூப்பெய்துதல் என்பது சுமார் இரண்டு வருடங்கள் எடுத்துக்கொள்ளும் தொடர் நிகழ்வாகும். இப்போது பெண்கள் சுமார் 12 வயதிலேயே பூப்பெய்திவிடுகிறார்கள். சிலருக்கு 14-16 வயதிலும் இது நிகழ்கிறது. இதற்கு மரபியல் உட்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. பூப்பெய்துவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பேயே மார்பு பெருக்கத்தொடங்கும். சிலருக்கு பிறப்பு உறுப்பு, அக்குளில் ரோமங்கள் வளரத் தொடங்கும். எனவே, பூப்பெய்தும் வயதுக்குக் கொஞ்சம் முன்பேயே பெண் குழந்தைகளுக்கு இதைப் பற்றி அறிவுறுத்த வேண்டும். இதனால், தேவை இல்லாத பயம், சந்தேகங்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

சிலருக்கு, மார்புத் தசை மென்மையாக இருக்கும். சிலருக்கு கடினமாக இருக்கும். சிலருக்கு மெலிதான வலிகூட இருக்கும். மேலும் சிலருக்கு ஒரு மார்பு அதிக வளர்ச்சியும் ஒரு மார்பு சற்று வளர்ச்சிக் குறைவாகவும் காணப்படும். இவையாவும் இயல்பான விஷயங்களே எனப் புரிய வைக்க வேண்டும்.மாதவிலக்கு சுழற்சி சுமார் 28 நாட்கள் முதல் 40 நாட்களுக்கு ஒருமுறை நிகழும். பொதுவாக, ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும். ஒருவரின் உடல்வாகு, உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை, மரபியல் போன்ற காரணங்களால் இந்த சுழற்சியில் வேறுபாடுகள் இருக்கும். எனவே, தனது தோழிக்கு இது போன்ற பிரச்னை இல்லையே எனக் குழம்ப வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும்.சானிட்டரி நாப்கின்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை பெண் குழந்தைகளுக்கு முன்பே கற்றுக்கொடுப்பது நல்லது. இது, முதல் முறை மாதவிடாய் ஏற்படும்போது அதை எதிர்கொள்வதற்கு உதவியாய் இருக்கும்.

பள்ளியிலோ வெளியிலோ இருக்கும்போது பூப்பெய்துதல் நிகழ்ந்துவிட்டால், தயங்காமல் ஆசிரியையிடமோ அருகில் உள்ள பெண்களிடமோ சொல்லி உதவி கேட்கலாம் தவறே இல்லை என்பதைக் கட்டாயம் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். முகத்தில் பரு ஏற்படுவது, அதிகமாக வியர்ப்பது, வியர்வை கடினமான வாடையுடன் இருப்பது, குரல் லேசாக மாறுவது, இடுப்பு அகலமாவது ஆகியவை அனைத்துமே பூப்பெய்துதலின் இயல்பான உடல் மாற்றங்கள் என்பதைப் புரியவைக்க வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்துவதற்கு இரண்டு வருடங்களுக்கு உள்ளாகத்தான் அவர்கள் உடல் தீவிரமான வளர்ச்சி அடைகிறது ((Peak Height Velocity). பொதுவாக, பூப்பெய்த்தியதுக்குப் பிறகு பெண்களின் உயரம் அதிகரிப்பது குறைவு. எனவே, இந்தக் காலகட்டத்தில் உடலுக்கு வலுவூட்டும் உணவுகள் உண்பது அவசியம்.

உடலின் அத்தியாவசிய தேவைகளான கார்போஹைட்ரேட்; கொழுப்புச்சத்து; ஏ, சி, இ, டி, கே மற்றும் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள்; நார்ச்சத்து; நீர்ச்சத்து; இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைந்த உணவுகளான அரிசி, இறைச்சி, முட்டை, பால், சிறுதானியங்கள், அனைத்துவண்ண காய்கறிகள், கீரைகள், பழங்கள் என ஆரோக்கியமான உணவுகளைத் தர வேண்டும்.

ஜங்க்ஃபுட்ஸ், கார்போனேட்டட் பானங்கள், சாக்லேட், செயற்கையான பழரச பானங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவை ஹார்மோன் சுரப்பை பாதிக்கும் என்பதால் இவற்றை இந்த வயதில் தவிர்ப்பது நல்லது. உடலின் தசை வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி சீராக இருக்க வேண்டியது அவசியம். எனவே, நீச்சல், சைக்கிளிங், ஏரோபிக்ஸ், நடனம் போன்ற உடல் உழைப்பு நிறைந்த பணிகளில் தினசரி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஈடுபடலாம்.

The post பெண் குழந்தை பராமரிப்பு… கம்ப்ளீட் கைடு! appeared first on Dinakaran.

Read Entire Article