பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு பேடராயனபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பாபுஜிநகரில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். அந்த இளம்பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். அந்த இளம்பெண் உயர்படிப்பை வெளிநாட்டுக்கு சென்று படிக்க விரும்பினார். இதற்காக பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து, இளம்பெண்ணுக்கு பாஸ்போர்ட் தகவல்கள் குறித்து பரிசீலனை நடத்துவதற்கு பேடராயனபுரா போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதன்பேரில், பாபுஜிநகரில் உள்ள இளம்பெண் வீட்டுக்கு, பேடராயனபுரா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் கிரண் சென்றிருந்தார். இளம்பெண்ணிடம், பாஸ்போர்ட் குறித்து பரிசீலனையின்போது, அவருக்கு போலீஸ்காரர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதாவது உங்களுடைய அண்ணன் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. அதனால் உங்களது பாஸ்போர்ட் ரத்தாக வாய்ப்புள்ளது. நான் சொல்வதுபடி கேட்டு நடந்தால், எந்த பிரச்சினையும் இல்லாமல் பாஸ்போர்ட் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். வீட்டின் கதவை பூட்டும்படி இளம்பெண்ணிடம் போலீஸ்காரர் சொல்லியதாகவும், இதற்கு அவர் மறுத்துள்ளார். இதையடுத்து வீட்டுக்கதவை போலீஸ்காரரே பூட்டிவிட்டு, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதையடுத்து போலீஸ்காரர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து போலீசில் இளம்பெண் புகார் அளித்தார். இதுபற்றி உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. விசாரணையில், இளம்பெண்ணுக்கு கிரண் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸ்காரர் கிரணை பணியிடை நீக்கம் செய்து துணை போலீஸ் கமிஷனர் கிரீஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.