பெண் உட்பட 5 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

3 hours ago 1

நெல்லை: நெல்லை அருகே இருதரப்பு மோதலில் 5 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு 4 ஆயுள் தண்டனையும், எதிர்தரப்பில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நெல்லை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகே அத்தாளநல்லூர், கோட்டை தெருவைச் சேர்ந்தவர் விவசாயி சின்னத்துரை என்ற நவநீதகிருஷ்ணன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாயாண்டி தரப்பினருக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு மாயாண்டியின் உறவினர் சுப்பிரமணியன், அவரது அண்ணன் குணசேகரன் ஆகியோர் சின்னத்துரை வயலுக்கு தங்களது மாட்டை தேடி சென்றனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சின்னத்துரை, மணி என்ற மணிகண்டன், முத்துப்பாண்டி, அர்ச்சுனன் ஆகியோர் குணசேகரனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

அப்போது தப்பியோடிய சுப்பிரமணியன் நடந்த விவரங்களை உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாயாண்டி மற்றும் சுப்பிரமணியனின் உறவினர்கள் 13 பேர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்றனர். குணசேகரனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் அத்தாளநல்லூர் வயலில் இருதரப்பினரும் ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். இதில் சின்னத்துரை என்ற நவநீத கிருஷ்ணன் (38), அவரது உறவினர்களான பாண்டியம்மாள் (46), அவரது மகன் மணிகண்டன் (25), முத்துப்பாண்டி (30) ஆகிய 4 பேரும் உயிர் இழந்தனர்.

இதற்கிடையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குணசேகரன் உயிரிழந்தார். இருதரப்பு மோதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து இரு தரப்பையும் சேர்ந்த 14 பேரை கைது செய்தனர். இந்த 2 வழக்குகளும் நெல்லை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின் போது ஒரு தரப்பில் ஒருவரும் மற்றொரு தரப்பில் 3 பேரும் என 4 பேர் உயிரிழந்தனர். இதனால் குணசேகரனை கொலை செய்ததாக அர்ச்சுனன் மீதும், 4 பேரை கொன்றதாக பெரியகுட்டி என்ற பொன்னுத்துரை (63), அவரது தம்பி முருகன் (41), துரை என்ற முத்துப்பாண்டி (63), கருத்தப்பாண்டி (47), அவரது தம்பி நயினார் என்ற ஆறுமுக நயினார் (41), அவரது தம்பி சுப்பிரமணியன் (36), மகாராஜன் (42), கருத்தபாண்டி (50), மாயாண்டி (84), கொத்தனார் ஆதிமூல கிருஷ்ணன் (39) ஆகிய 10 பேர் மீதும் விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கில் நெல்லை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குணசேகரனை கொலை செய்த குற்றத்திற்காக அர்ச்சுனன் (50) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் 4 பேரை கொலை செய்ததற்காகவும், அந்த கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக பெரியகுட்டி என்ற பொன்னுத்துரை, அவரது தம்பி முருகன், துரை என்ற முத்துப்பாண்டி, கருத்தப்பாண்டி, அவரது தம்பி நயினார் என்ற ஆறுமுக நயினார், அவரது தம்பி சுப்பிரமணியன், மகாராஜன், கருத்தபாண்டி, மாயாண்டி, கொத்தனார் ஆதிமூல கிருஷ்ணன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் வீதம் 10 பேருக்கும் தலா 4 ஆயுள் தண்டனை விதித்து, அந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

The post பெண் உட்பட 5 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article