சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் பண்ருட்டி வேல்முருகன் (தவாக) உறுப்பினர் பேசியதாவது: சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் சேதம் ஏற்பட்டுள்ளது.
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டு சென்னையிலும், தென்மாவட்டங்களிலும் வெள்ளச்சேதம் ஏற்பட்டபோது ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது. இன்றைக்கு 3 மாவட்டங்களுக்கு தான் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பெஞ்சல் புயல் பாதித்த அனைத்து மாவட்டங்களிலும் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
காட்டுமன்னார்கோவில் சிந்தனைசெல்வன் (விசி) பேசும்போது, வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இறந்த கால்நடைகள் குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது. அத்துடன், வீட்டில் சேதம் அடைந்த பொருட்கள் தொடர்பாகவும் அரசு கணக்கெடுக்க வேண்டும். அங்குள்ள அரசு கல்லூரி மாணவர்களுக்கு ஓராண்டு கல்வி கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என்றார். பென்னாகரம் ஜி.கே.மணி (பாமக), வெள்ள நிவாரணம் வழங்கியதில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது என்றார்.
The post பெஞ்சல் புயல் பாதித்த அனைத்து மாவட்டங்களிலும் பாகுபாடு இல்லாமல் ரூ.6,000 நிவாரணத்தொகை வழங்க வேண்டும்: உறுப்பினர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.